ஆன்மிகம்
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தேங்கியுள்ள தண்ணீர். அம்மன் சன்னதி கருவறையில் தேங்கியுள்ள தண்ணீர்.

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-11-30 06:26 GMT   |   Update On 2021-11-30 06:26 GMT
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இன்று காலையில் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உற்சவர் சாமி மற்றும் அம்மன் ராஜகோபுரத்திற்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் அகழி தண்ணீர் கடந்த 12-ந்தேதி புகுந்தது. கோவில் வளாகத்தில் உள்ளே இருக்கக்கூடிய குளம் பகுதி முழுவதுமாக தண்ணீர் தேங்கியது. இதையடுத்து படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்தது.

முட்டி அளவு தண்ணீரில் பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். அகழி நீர்மட்டம் உயர்ந்ததால் கோவிலுக்குள்ளும் நீர்மட்டம் உயர தொடங்கியது.

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது அபிஷேக நீர் செல்லும் வழியாக கோவிலுக்குள் தண்ணீர் வந்ததால் அதை மூடி விட்டுஉள்ளே இருக்கக்கூடிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.

ஊற்று மற்றும் தொடர் மழையால் மீண்டும் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்கிக் கொண்டே இருந்தது.

நேற்று அம்மன் சன்னதி கருவறைக்குள் தண்ணீர் புகுந்தது. தண்ணீரில் நின்று கொண்டு அர்ச்சகர்கள் அம்மனுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்ததால் இன்று காலையில் மூலவர் ஜலகண்டேஸ்வரர் சன்னதி பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்தது.

கோவிலுக்குள் பல்வேறு வழிகளில் தண்ணீர் வருகிறது. சுரங்கப்பாதை அமைந்துள்ள இடம், தண்ணீர் வெளியேறும் குழாய் ஊற்று போன்றவற்றிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.

இதனால் இன்று காலையில் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் பாசி பிடித்து வழுக்கி விழ கூடிய சூழ்நிலை உள்ளது. தண்ணீரும் அசுத்தம் அடைந்து வருகிறது.

இதனால் இன்று காலையில் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

உற்சவர் சாமி மற்றும் அம்மன் ராஜகோபுரத்திற்கு வெளியே சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

கோவில் கருவறைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் சுற்றுப்பிரகாரத்தில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தண்ணீரும் மாசடைந்து வருகிறது.

உள்ளே சென்றால் பகதர்களுக்கு அவதி ஏற்படும். தண்ணீர் வடியும் வரை கோவில் பூட்டப்பட்டிருக்கும். கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News