ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தேர்கள் சீரமைக்கும் பணி நடந்த காட்சி.

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு தயாராகும் திருவண்ணாமலை பஞ்ச ரதங்கள்

Published On 2021-10-16 08:48 GMT   |   Update On 2021-10-16 08:48 GMT
திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர் மற்றும் அம்மன் தேரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பைபர் கண்ணாடிகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி தொடங்க உள்ளது.

இதில் முக்கிய நிகழ்வாக மகா தேரோட்டம் நவம்பர் மாதம் 16-ந்தேதி நடைபெற உள்ளது‌. இதையடுத்து 19-ந்தேதி காலை கோவிலின் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணா மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 16-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து, தீப திருவிழாவுக்கான பணிகளை கோவில் நிர்வாகம் தொடங்கியது.

இதில் மிக முக்கியமானதாக பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களை பாதுகாக்க வைத்திருந்த இரும்பு தகடுகளை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

இதையடுத்து அண்ணாமலையார் தேர் மற்றும் அம்மன் தேரை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பைபர் கண்ணாடிகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகள் நிறைவு பெற்றதும் 5 தேர்களை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. கார்த்திகை தீப திருவிழாவிற்கு ஏற்பாடு தயாராவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோவில் அலுவலர்கள் கூறும் போது:-

கொரோனாவால் தடை உத்தரவு காரணமாக பஞ்ச ரதங்கள் கடந்த ஆண்டு சீரமைக்க முடியவில்லை. இந்த ஆண்டு சீரமைக்க தொடங்கியுள்ளோம். இது தொடர்ந்து தேர் திருவிழாவை நடத்துவது குறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஆண்டு நடத்துவதற்கு அரசு அனுமதிக்கவில்லை.

இதனால் மாடவீதியில் சாமி வீதிஉலா மற்றும் மகா தேரோட்டம் நடைபெறவில்லை கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு 2-ம் அலையின் தாக்கத்திலிருந்து தமிழகம் மீண்டு வந்துள்ளதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவையும் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கும் என நம்பிக்கையுடன் காத்திருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News