ஆன்மிகம்
கண்ணன்

மனதளவில் பிரம்மச்சாரியானவர் ‘கண்ணன்’

Published On 2021-07-30 14:11 IST   |   Update On 2021-07-30 14:11:00 IST
அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்துக்கு, முடிசூட்டு விழா நடைபெற இருந்தது. பிரம்மச்சாரியான ஒருவர் சூட்டினால்தான், அவனது தலையில் மணிமுடி நிற்கும் என்ற விதி இருந்தது.
மகாவிஷ்ணு ஏராளமான அவதாரங்களை எடுத்திருந்தாலும், அவற்றுள் குறிப்பிடத்தக்க அவதாரங்கள்தான் ‘தசாவதாரம்’ என்று போற்றப்படுகிறது. அதேபோல அவருக்கு எண்ணற்ற திருநாமங்கள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட 12 திருநாமங்களே சிறப்புக்குரியவையாக போற்றப்படுகின்றன.

கேசவன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், நாராயணன், ரிஷிகேசன், வாமனன், ஸ்ரீதரன், தாமோதரன், பத்மநாபன். இவைதான் அந்த 12 திருநாமங்கள்.

இந்த 12 திருநாமங்களிலும் ‘கோவிந்தன்’ என்ற திருநாமம் மிகச்சிறப்பு வாய்ந்தது. இதற்கு ‘ஆசையில்லாதவன்’ என்று பெயர். மனதளவில் பிரம்மசாரி ஆனவன் என்று பொருள்.

‘கோபியர்களுடன் பல லீலைகள் புரிந்தவன் எப்படி பிரம்மச்சாரியாவான்?’ என்ற கேள்விதான் பலரது மனதில் எழும். இங்கே லீலை என்பது, ‘விளையாட்டை’ குறிக்கும். கோபியர்களுடன் கண்ணன் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தபோது, அவனுக்கு வயது 9. அந்த பாலகனின் வயதில் அவனது விளையாட்டு, சிறு குழந்தைக்குரிய செயல்பாட்டு அளவிலேயே இருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், கண்ணனை அந்த 9 வயதில் வாலிபனைப் போல் சித்தரிக்கக்கூடாது.

திரவுபதிக்கு, துரியோதன சபையில் அவமானம் நடந்தபோது, அவள் கிருஷ்ணனை ‘கோவிந்தா..’ என்று கூறித்தான் அழைத்தாள். அதனால்தான் கிருஷ்ணன், அந்த சபைக்கு நேரடியாக வந்து திரவுபதிக்கு உதவவில்லை. வெறும் ஆடையை மட்டும் அனுப்பி அவளது மானத்தைக் காத்தான். நேரடியாக வந்தால், துரியோதன சபையில் இருப்பவர்களைப்போலவே, கண்ணனும் திரவுபதி மானத்தை இழந்து நிற்கும் அந்த அலங்கோல காட்சியைக் காண நேரிடும். அதுமட்டுமின்றி அந்த நேரத்தில், திரவுபதிக்கு தேவைப்பட்டது அவளது மானத்தைக் காப்பதற்கான ஆடை மட்டுமே. ஆகையால்தான் கண்ணன், அந்த சபைக்கு நேரடியாக வராமல் தன்னுடைய அருளால் ஆடையை மட்டும் அவளுக்கு வழங்கினான்.

அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்துக்கு, முடிசூட்டு விழா நடைபெற இருந்தது. பிரம்மச்சாரியான ஒருவர் சூட்டினால்தான், அவனது தலையில் மணிமுடி நிற்கும் என்ற விதி இருந்தது. அப்போது அதை சூட்டியவர் கிருஷ்ணன்தான்.

Similar News