ஆன்மிகம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து

Published On 2021-07-09 12:06 IST   |   Update On 2021-07-09 23:01:00 IST
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் கடந்த 5-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கான தடை நீக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் :

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் கடந்த 5-ந்தேதி முதல் அமலுக்கு வந்தன. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.

அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் கடந்த 2 மாதமாக 2-ம்அலை தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்திருந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் தரிசனத்திற்கான தடை நீக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று காலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை வரை தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அதேபோல் அன்று இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிகளுக்குட்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அமாவாசை நாள் என்பதால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கமான தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கோயில் நிர்வாகத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News