ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் இலவச தரிசனத்தை தொடங்க வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்

Published On 2021-07-07 13:14 IST   |   Update On 2021-07-08 06:55:00 IST
ஆந்திராவில் அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இலவச தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
திருப்பதி :

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி ஆந்திராவிலும் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது. இதன் காரணமாக திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வரை திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை சராசரியாக தினமும் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக இருந்தது. ஊரடங்கு தளர்வுகளால் இப்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தினமும்
திருப்பதி
க்கு வருகின்றனர்.

ரூ.300 கட்டணத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்ட நடைமுறையே தற்போது வரை தொடர்கிறது.

கொரோனா பிரச்சனைக்கு முழு அளவில் தீர்வுகள் ஏற்பட்ட பிறகே மீண்டும் இலவச தரிசனம் தொடங்கப்படும் என ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆந்திராவில் அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இலவச தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

திருப்பதிக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இயல்புநிலை திரும்பியுள்ளதால் இலவச தரிசனத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்பதியில் நேற்று 16,984 பக்தர்கள் வழிபட்டனர். அவர்களில் 7,642 பேர் முடிகாணிக்கை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Similar News