ஆன்மிகம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்வதையும் படத்தில் காணலாம்.

குமரி மாவட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம்

Published On 2021-07-06 08:24 IST   |   Update On 2021-07-06 08:24:00 IST
நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், வடசேரி காசி விஸ்வநாதர் ஆலயம், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் மற்றும் சிறிய கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்து வருவதால் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நேற்று முதல் வழிபாட்டு தலங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டன.

அதே போல குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதத்தினரின் வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில், தோவாளை முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

நாகர்கோவிலை பொறுத்த வரையில் நாகராஜா கோவில், ஒழுகினசேரி சோழராஜா கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், அழகம்மன் கோவில், வடசேரி காசி விஸ்வநாதர் ஆலயம், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் மற்றும் சிறிய கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நாகராஜா கோவிலில் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல கிறிஸ்தவ ஆலயங்களிலும் பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகள் நடந்தன. அதே சமயம் கோவில்களில் அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் நடத்த அனுமதியில்லை. சாமி தரிசனம் செய்ய மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

Similar News