ஆன்மிகம்
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்திற்கு வந்த காவிரி நீருக்கு பொதுமக்கள் பூஜைசெய்து வரவேற்ற போது எடுத்த படம்.

மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்திற்கு வந்த காவிரி நீருக்கு பூஜைகள் செய்து வழிபாடு

Published On 2021-06-21 05:51 GMT   |   Update On 2021-06-21 05:51 GMT
மயிலாடுதுறையில் காவிரி துலாகட்டத்திற்கு வந்த காவிரி நீருக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அப்போது நாடக கலைஞர்கள் விநாயகர், சிவன், அகத்தியர் வேடங்கள் அணிந்து வரவேற்றனர்.
கடந்த 12-ந் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 16-ந் தேதி கல்லணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் நேற்று முன்தினம் இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி ஆற்றின் கதவணைக்கு வந்து சேர்ந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து வினாடிக்கு 682 கனஅடி நீர் பொதுப்பணித்துறையினரால் திறந்து விடப்பட்டது. இந்த நீரானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தை வந்தடைந்தது.

காவிரி துலாக்கட்டத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக புராணங்களில் கூறப்படுவதால், மயிலாடுதுறை சிவாலயங்களில் இருந்து சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது இங்கு வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி செல்வது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரி துலா கட்டத்திற்கு வந்த காவிரி நீரை துலாக்கட்ட பாதுகாப்பு கமிட்டியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

துலாக்கட்டத்திற்கு பொங்கி வந்த காவிரி அன்னைக்கு மலர்தூவி வரவேற்று, சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் பொதுமக்களுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு மலர்தூவி வரவேற்றனர்.

கிராமிய நாடக கலைஞர்கள் விநாயகர், சிவன், அகத்தியர் போன்ற வேடங்கள் அணிந்து வரவேற்றனர். தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை செய்து காவிரி நீரை வணங்கி வழிபாடு நடத்தினர்.
Tags:    

Similar News