ஆன்மிகம்
கேதார்நாத் கோவில் நடை திறப்பு

கேதார்நாத் கோவிலில் பக்தர்களின் அனுமதி இன்றி நடைபெற்ற பூஜை

Published On 2021-05-18 07:48 GMT   |   Update On 2021-05-18 07:48 GMT
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் நடை, 6 மாத கால குளிர்கால அடைப்புக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. இந்த பிரசித்தி பெற்ற இமயமலை கோவில் வாயில் கதவுகளை காலை 5 மணிக்குத் திறந்து குருக்கள் பூஜை செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி பெயரில் முதல் பூஜை செய்யப்பட்டது.

நடை திறப்பையொட்டி கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தலைமை குரு பாகேஷ் லிங் உள்ளிட்ட குருக்கள், அரசு மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிலர் மட்டுமே பங்கேற்றனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

கேதார்நாத் கோவில் திறக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரத் சிங் ராவத், மக்களின் பாதுகாப்பு கருதியே கோவிலுக்கான யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், பக்தர்கள் காணொலி வாயிலாக தரிசித்து, வீட்டிலேயே பூஜை செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்கள் புனித யாத்திரை செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது. தொற்று தணிந்தபிறகு, கேதார்நாத் யாத்திரை தொடங்கும் என்று உத்தரகாண்ட் சுற்றுலாத்துறை மந்திரி சத்பால் மகராஜ் தெரிவித்தார்.

உத்தரகாண்டில் உள்ள யமுனோத்ரி கோவிலை கடந்த 14-ந்தேதியும், கங்கோத்ரி கோவிலை 15-ந்தேதியும் குருக்கள் திறந்து வழக்கமான பூஜைகளை செய்தனர். பத்ரிநாத் கோவில் இன்று (மே 18) திறக்கப்படுகிறது. ஆனால், கொரோனா சூழ்நிலை காரணமாக, மறுஉத்தரவு வரும் வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News