ஆன்மிகம்
அட்சய திருதியை நாளில் செய்ய வேண்டிய தானங்கள்

அட்சய திருதியை நாளில் செய்ய வேண்டிய தானங்கள்

Published On 2021-05-14 08:28 GMT   |   Update On 2021-05-14 08:28 GMT
அட்சய திருதியை நாளில் நாம் செய்யக்கூடிய தான, தர்மங்கள், நற்செயல்களால் நம்முடைய வளம், செல்வம், ஆரோக்கியம்,புண்ணியம் அதிகரிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நல்ல செயலுக்கும் 100 மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் நாள் தான் இந்த அட்சய திருதியை. இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பல மடங்கு பெருகும் என்ற நம்பிக்கை இருந்தாலும். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய தான, தர்மங்கள், நற்செயல்களால் நம்முடைய வளம், செல்வம், ஆரோக்கியம்,புண்ணியம் அதிகரிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இன்று அட்சய திருதியை இந்த நாளில் நீங்கள் செய்ய வேண்டிய தான தர்மங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

தண்ணீர் பந்தல் :

சித்திரை மாதத்தில் அதாவது வெயில் காலத்தில் வரக்கூடிய இந்த தினத்தில் பலரும் வெயிலால் தாகத்துடன் செல்வது வழக்கம். அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நாம் நம் வீட்டின் முன் ஒரு பானையில் குடி நீர் வைப்பது நல்லது. நம் வீடு வழியாக செல்வோர் தண்ணீரை அருந்தி திருப்தி அடைந்தால் இறைவனின் அருள் நிச்சயம் கிடைக்கும். இது இந்த கோடை காலம் முழுவதும் செய்வது மிகவும் நல்லது. இந்த தண்ணீர் தானம் செய்வதால் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறையும்.

அன்ன தானம் செய்தல் :

தற்போதுள்ள இக்கட்டான நிதி சூழலில், பலரும் தங்களின் வேலை, தொழில் செய்ய முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அக்‌ஷய திருதியை எனும் அற்புத நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்வது நல்லது. முடிந்தால் உணவுகளை பொட்டலம் போட்டு ஏழை, எளியவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு வழங்கலாம். இந்த நாளில் அன்னதானம் செய்தால் நவக்கிரகங்களினால் ஏற்படக்கூடிய தோஷங்கள், பிரச்னைகள் நீங்கி நன்மை கிடைக்கும். மேலும் தானங்களிலேயே சிறந்த தானம் அன்னதானம் ஆகும்.

ஆடை தானம்

அட்சய திருதியை நன்னாளில் உங்களால் முடிந்த அளவு புத்தாடைகளை தானம் செய்வது நல்லது. புத்தாடையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். நாம் புத்தாடைகளை தானம் செய்வதால் வாங்குபவருக்கும். தானம் செய்பவருக்கும் ஐஸ்வர்யம் உண்டாகும். இந்த அற்புத நாளில் வீட்டின் பெண்களுக்கும் பரிசுகளை வழங்கி அவர்களை மகிழ்விப்பதன் மூலம் உங்கள் வீடு ஆண்டு முழுவதும் வளமாக இருக்கும்.

புத்தகங்களை வழங்குதல்

ஒருவரின் வாழ்க்கை முன்னேற முக்கியமான தேவை கல்வி. சிந்தனையை தூண்டி, சிறப்பாக யோசிக்க பல புத்தகங்களை படிப்பது அவசியம். அப்படிப் பட்ட புத்தகத்தை நாம் இன்றைய தினத்தில் தானமாக வழங்குவதாலும். நிதி சிக்கலால் கல்வி கற்க முடியாத சூழலில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, புத்தகங்கள் வாங்கித் தருவதன் மூலம் நம் ஜாதகத்தில் புதனால் ஏற்படக்கூடிய பிரச்னை நீங்கி, வலுப்பெறுவார்.

குங்குமம் தானம்

மகாலட்சுமி தேவிக்குரிய அற்புத தினமான இந்த சுபநாளில் குங்குமத்தை சுமங்கலிக்கு தானமாக வழங்குவதும், மங்களப் பொருட்களை பெண்களுக்கு கொடுப்பதால் சுக்கிர பகவானின் ஆசி பெற்றிடலாம். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

சந்தனத்தை தானமாக வழங்குதல்

இந்து தர்மத்தின்படி சந்தனம் இறையருள் நிறைந்ததாகப் பார்க்கப்படுகிறது. சந்தனத்தை தானமாக வழங்குவதாலும். கோயிலுக்கு சந்தனத்தை அளிப்பதால் நம்முடைய ஆரோக்கியம் சிறக்கும். ஜோதிடத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை சந்தனம் ராகு மற்றும் கேது ஆகியோரை குறிப்பதாகும். சந்தனம் தானமாக வழங்குவதால் ராகு - கேதுவால் ஏற்படும் தீங்கு நீக்கும் என்று நம்பப்படுகிறது.

மூதாதையர்கள் வழிபாடு

இந்த அற்புத நாளில் மூதாதையர்களை வணங்கி அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து வழிபடுவதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
Tags:    

Similar News