ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோவில் பற்றி அரிய தகவல்கள்

Published On 2021-05-11 09:11 GMT   |   Update On 2021-05-11 09:11 GMT
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து போகும் வழிபாட்டுத் தலமாக ‘திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்’ விளங்குகிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து போகும் வழிபாட்டுத் தலமாக ‘திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்’ விளங்குகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவில், மிகவும் பிரசித்திபெற்றது. திருப்பதி என்பது மலையின் அடிவாரப் பகுதியையும், திருமலை என்பது வெங்கடாஜலபதி கோவில் கொண்டிருக்கும் மலையின் மேல் பகுதியையும் குறிக்கும். இந்த திருப்பதி ஏழுமலையானைப் பற்றிய சில சுவாரசியமான தவல்களை இங்கே பார்க்கலாம்.

* திருமலையில் வீற்றிருக்கும் வெங்கடாஜலபதிக்கு தினமும் செய்யப்படும் பூஜைகளுக்கான விதிமுறைகளை வரையறுத்துக் கொடுத்தவர், ராமானுஜர்.

* திருப்பதி ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக தயிர் சாதம் படைக்கப்படுகிறது. அந்த தயிர் சாதத்தை மண் சட்டியில் வைத்து படைக்கிறார்கள்.

* திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை அங்குள்ளவர்கள் ‘மனோகரம்’ என்று அழைக்கிறார்கள். 1715-ம் ஆண்டு முதலே ஏழுமலை யானுக்கு லட்டு படைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் 1803-ம் ஆண்டு முதல்தான், அந்த லட்டை பூந்தியாக பக்தர்களுக்கு வினியோகம் செய்திருக்கிறார்கள். காலப்போக்கில்தான் லட்டு வடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

* திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆனி மாதம், தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி நாள் என மூன்று முறை தர்பார் நடத்தப்படும். இதில் ஆனி மாதத்தில் நடைபெறும் தர்பாரின் போது, கோவில் குறித்த வரவு-செலவு கணக்குகள் ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கப்படும். பிறகு, ஏழுமலையானின் ஒப்புதல் பெற்றதாகப் பாவித்து, கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் புதிதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

* திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் உடையானது, 21 முழ நீளமும், 5 கிலோ எடையுமுள்ள பட்டு பீதாம்பரமாகும். இதை தயாரிப்பதற்கென்றே சென்னையில் தனிக்கடையே இயங்குகிறதாம். இந்த ஆடை, ஏழுமலையான் கோவில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும்.

* திருமலை 3 ஆயிரம் அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110 டிகிரிக்கு குறைவதே கிடையாது என்கிறார்கள். இது அதிகமான நகைகளை, இறைவன் தன் உடலில் அணிந்திருப்பதால் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

* ஏழுமலையானின் சாளக்கிராம தங்க மாலை 12 கிலோ எடை கொண்டதாம். இதை ஏழுமலையானுக்கு சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவைப்படுவார்களாம். சூரியகடாரி என்ற ஆபரணம் 5 கிலோ எடை கொண்டது. இவை போல அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன.

* ஏழுமலையானுக்கு தினசரி செய்யப்படும் அபிஷேகங்களில், ஒரு முறை செய்யப்படும் அபிஷேகத்திற்கு மட்டும் குறைந்த பட்சமாக ரூ.1 லட்சம் வரை செலவு ஆவதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News