ஆன்மிகம்
ஆன்மிக கதைகள்

இறைவனால் வழங்கப்படும் வளங்கள்

Published On 2021-05-11 07:06 GMT   |   Update On 2021-05-11 07:06 GMT
இந்தக் கதையை நாம், நம் வாழ்வோடு பொருத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது. இறைவன் நமக்கு அளித்த வளங்களை பெருக்க வேண்டுமே தவிர, அழிக்கக்கூடாது. அதுவே உங்களை வெற்றியாளனாக்கும்.
இயற்கை எழில் சூழ்ந்த நகரம் அது. படர்ந்து விரிந்திருந்த வனமும், அதன் ஒரு பகுதியாக இருந்தது. நகரத்தைச் சுற்றிலும் ஆளில்லாத தீவுகள் ஏராளமாக இருந்தன. அந்த நகரத்திற்கு தலைவராக இருந்தவர், வயோதிகம் காரணமாக அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அங்கு வாரிசு அரசியல் இல்லாததால், வீரத்திலும், மன வலிமையிலும், புத்திக்கூர்மையிலும் சிறந்த ஒருவரை நகரத்தில் இருந்தே தேர்வு செய்ய வேண்டியதிருந்தது.

தலைவருக்கான போட்டி வைக்கப்பட்டதில் அங்கு வசித்த பல இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். அதில் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருவர் தேர்வானார்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே வீரத்தை வெளிப்படுத்தி இருந்ததால், மீண்டும் அவர்களுக்குள் போட்டி வைத்து, அவர்களில் ஒருவர் பெருங்காயத்தை அடைய தலைவருக்கு விருப்பம் இல்லை. அதனால் வேறு ஒரு போட்டியை வைக்க அவர் முன் வந்தார்.

ஊர் முன்பாக இரண்டு வீரர்களையும் அழைத்த தலைவர், போட்டியை விவரித்தார்.

“வீரர்களே.. இதுவரை நடந்த போட்டிகளில் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்திவிட்டீர்கள். அதில் உங்களுக்கு நிகரானவர் இல்லை என்று நிரூபித்து விட்டீர்கள். இப்போது நடக்கப்போவது இறுதிப்போட்டி. தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் போட்டி. இதில் வெற்றிபெறுபவர்தான் அடுத்த தலைவராக முடிசூட்டப்படுவார். உங்கள் இருவருக்கும் சில ஆயுதங்களும், சில சமையல் பாத்திரங்களும், நம்முடைய உணவு தானியமாக இருக்கும் சோளம் ஒரு முட்டையும் கொடுக்கப்படும். நம் நகரைச் சுற்றி இருக்கும் தீவுகளில், ஏதாவது இரண்டு தீவுகளில் ஆளுக்கு ஒருவராக விட்டு விடுவோம். உங்களிடம் இருக்கும் தானியத்தை வைத்துக் கொண்டு அது தீரும்வரை அந்த காட்டிலேயே தங்கி இருங்கள். தானியம் தீர்த்த பிறகு, காட்டில் இருக்கும் மரத்தின் கிளைகளை ஒடித்து கடற்கரையில் தீ மூட்டுங்கள். அந்த புகையை வைத்து, நம் ஆட்கள் அங்கு வந்து உங்களை மீட்பார்கள். உங்கள் இருவரில் யார் தானியத்தை பயன்படுத்தி, அந்தத் தீவில் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்கிறீர்களோ, அவர்தான் அடுத்த தலைவன்.”

நிபந்தனைகளை இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் படகு மூலமாக ஆளுக்கொரு தீவில், அவர்களுக்கான பொருட்களுடன் இறக்கிவிடப்பட்டனர். மூன்று மாதத்திற்கு தேவையான சோளம் அவர்களிடம் இருந்தது. போட்டி ஆரம்பமாகிவிட்டது. இரு வீரர்களும், ஆளில்லாத தீவுகளில் வசிக்கத் தொடங்கினர். ‘இரண்டு தீவுகளிலும் எங்கேனும் புகை எழும்புகிறதா?’ என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள்.

நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்து, பல நாட்கள் கடந்துவிட்டது. ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையில் இருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது. அவன் கரைக்கு வந்ததும், மற்றொருவன் இன்னும் வந்துசேரவில்லை என்பதை தெரிந்து கொண்டான். பின்னர் தலைவரிடம், “தலைவரே.. எங்களுக்கு கொடுக்கப்பட்ட சோளம், இரண்டு மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. இவ்வளவு நாள் தாக்குப்பிடித்தது என்னுடைய சாமர்த்தியம்தான். என் சகப் போட்டியாளன், என்னைப் போலவே புத்திசாலியாக இருப்பான் என்ற நம்பிக்கை இல்லை. எனவே இன்னும் சில நாட்கள் பார்த்து விட்டு, எனக்கே தலைவர் பதவியைத் தர வேண்டுகிறேன்” என்றான்.

அதைக்கேட்டதும் தலைவருக்கு அச்சம் வந்தது. ‘மற்றொரு வீரன் என்ன ஆனானோ?’ என்று நினைத்தவர், சில நாட்கள் காத்திருந்தார். 4 மாதத்தை கடந்து விட்டதால், பயம்கொண்ட அவர் உடனடியாக மற்றொரு வீரன் விடப்பட்ட தீவுக்கு ஆட்களுடன் சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு பலவித சிந்தனை. ‘அந்த வீரனை, விலங்குகள் ஏதாவது கொன்றிருக்குமா?, தனிமை பயத்தில் மனம் பேதலித்து விட்டானா?, இல்லை பசியால் இறந்து போயிருப்பானா?’ என்றெல்லாம் நினைத்தபடியே பயணித்தவர், அந்த இடத்தை அடைந்துவிட்டார்.

தீவில் இறங்கி காட்டில் சிறிது தூரம் நடந்தவருக்கு, மூங்கிலாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட வீடு ஆச்சரியத்தை அளித்தது. காட்டிற்குள் சலசலப்பு கேட்டு, அந்த வீட்டிற்குள் இருந்த இளைஞன் ஓடிவந்தான். முன்பைவிட திடகாத்திரமாக இருந்தான். தலைவரை வணங்கி வரவேற்றான். வீட்டிற்குள் அழைத்துச் சென்று, வந்தவர்கள் அனைவருக்கும் சோள அடையும், மீனும் கொண்டு வந்து கொடுத்தான். தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“உனக்கு கொடுக்கப்பட்ட சோளம் மூன்று மாதத்திற்குள் முடிந்திருக்குமே. நீ என்னவென்றால் சோள அடையால் எங்களை வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு திடகாத்திரமாய் மாறியிருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ?” என்றார், ஆவல் குறையாமல்.

உடனே அந்த இளைஞன், “என்னோடு வாருங்கள் தலைவரே..” என்று வீட்டின் பின்புறப் பகுதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக் கொல்லை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.

இளைஞன் தொடர்ந்தான். “தலைவரே.. நான் வந்த அன்றே, எனது தானியத்தில் இருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன். இரண்டு மாதங்களிலேயே அது அறுவடைக்குத் தயாராகிவிட்டது. நான் எந்தக் கவலையுமில்லாமல் நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல. இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும், என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ முடியும்” என்றான்.

அவனை மகிழ்வோடு அனைத்துக் கொண்டார், ஊர் தலைவர். “தடுமாறிப்போவாய் என்று நினைத்து இந்தப் போட்டியை வைத்தேன். நீயோ உன் அறிவாலும், உழைப்பாலும் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டாய்” என்று கூறி, தலைவனாக அவனுக்கு முடிசூட்டினார்.

இந்தக் கதையை நாம், நம் வாழ்வோடு பொருத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது. இந்த உலகத்திற்குள் நம்மை அனுப்பி வைக்கும், இறைவன் நாம் வாழ்வதற்கான அனைத்து அடிப்படை தேவைகளையும், இயற்கை வளங்களாக கொடுத்து அனுப்பி வைக்கிறார். ஆனால் நம்மில் பலரும் பிற்காலத்தைப் பற்றிய சிந்தனை இல்லாமல், நமக்குப் பிறகான சந்ததியினரைப் பற்றி கவலைகொள்ளாமல், இருக்கும் வளங்களையெல்லாம் அழித்து, நம் சந்ததியினரையும் சங்கடத்தில் ஆழ்த்திவிடுகிறோம். இறைவன் நமக்கு அளித்த வளங்களை பெருக்க வேண்டுமே தவிர, அழிக்கக்கூடாது. அதுவே உங்களை வெற்றியாளனாக்கும். உங்கள் சந்ததியினர் உங்களைக் கொண்டாட வழிவகுக்கும்.
Tags:    

Similar News