ஆன்மிகம்
பக்தனுக்காக காலனை வதைத்த ஈசன்

பக்தனுக்காக காலனை வதைத்த ஈசன்

Published On 2021-05-07 07:00 GMT   |   Update On 2021-05-07 07:00 GMT
எம பயத்தை கடக்க உதவும் திருத்தலம் என்பதால், இத்தலம் ‘திருக்கடவூர்’ ஆனது. அட்டவீரட்டத்தலங்களில் ஒன்றான இத்தலத்தில்தான் எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார், சிவபெருமான்.
திருக்கடவூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எம பயத்தை கடக்க உதவும் திருத்தலம் என்பதால், இத்தலம் ‘திருக்கடவூர்’ ஆனது. அட்டவீரட்டத்தலங்களில் ஒன்றான இத்தலத்தில்தான் எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார், சிவபெருமான். அதன் மூலம் காலசம்ஹார மூர்த்தியாய் இங்கு அருள்பாலிக்கிறார்.

மிருகண்டூயர்-விருத்தை தம்பதிகளின் புதல்வர், மிருகண்டு மகரிஷி. இவருக்கும் முற்கல முனிவரின் மகளான மருத்துவதிக்கும் திருமணமாகி நெடுநாட்களாக புத்திர பாக்கியம் வாய்க்கவில்லை. இவர்கள் திருக்கடவூர் அருகில் உள்ள மணல்மேடு எனும் இடத்தில் தவச்சாலை அமைத்துத் தங்கியிருந்தனர். புத்திரபாக்கியம் வேண்டி அனுதினமும் இவர்கள் திருக்கடவூர் ஈசனையும், அபிராமி அன்னையையும் வழிபட்டு வந்தனர். ஒருநாள் மிருகண்டு மகரிஷியின் கனவில் தோன்றிய ஈசன், “அன்பனே! உனக்கு 16 வயது வரை வாழும் குறைந்த ஆயுளும், சிவபக்தியும், நிறைந்த அறிவும் ,உயர்ந்த ஒழுக்கமும் கொண்ட குழந்தை வேண்டுமா? அல்லது 100 வயது வரை ஆயுளும், மந்த அறிவும், தீய குணங்களும் கொண்ட குழந்தை வேண்டுமா?” எனக் கேட்டார்.

சற்றும் யோசிக்காத மிருகண்டு முனிவர், “தனக்கு 16 வயது வரை வாழும் அறிவுள்ள, சிவபக்தியுடைய குழந்தையே போதும்” என்று கூறினார். ஈசனும் அதன்படியே வரம் அளித்து மறைந்தார். நாட்கள் நகர்ந்தன. மருத்துவதி கருவுற்றாள். ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ‘மார்க்கண்டேயன்’ என்று பெயரிட்டு வளர்த்தனர். மார்க்கண்டேயன் மிகுந்த சிவபக்தி, நிறைந்த அறிவு, ஒழுக்கத்துடன் வளர்ந்தான். நாட்கள், வாரங்கள், மாதங்கள் என நகர்ந்து ஆண்டுகள் பல கடந்தன. மார்கண்டேயனுக்கு பதினாறு வயது பிறந்தது. தங்கள் மகனின் ஆயுட்காலம் முடியப்போவதை உணர்ந்த மிருகண்டுவும், மருத்துவதியும் மனம் பதைத்து கலங்கினர். தன் பிறப்பிலுள்ள பிரச்சினையைப் பற்றி தெரிந்துகொண்ட மார்க்கண்டேயர், சிவத்தல யாத்திரையை மேற்கொண்டார்.

காசியில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு, கங்கை நீரையும், மல்லிகைச் செடியையும் எடுத்துக்கொண்டு, பல தலங்களை தரிசித்து, அங்கங்கே சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டார். இறுதியில் திருக்கடவூர் வந்தடைந்தார். அன்றுதான் மார்க்கண்டேயரின் பதினாறு வயது முடிவடைவதாக இருந்தது. அவரது உயிரைப் பறிக்கப் பாசக்கயிற்றுடன் எருமை மீது ஏறி வந்தார், எமதர்மன். இதனைக்கண்ட மார்க்கண்டேயர், சிவனைத் தியானித்தவாறே மூலவரான அமிர்தகடேஸ்வரரை இறுகக் கட்டி அணைத்துக்கொண்டார். எமன் பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீச, அந்தப் பாசக்கயிறு மார்க்கண்டேயர் மீதும், அவர் கட்டி அணைத்திருந்த சிவலிங்கம் மீதும் விழுந்தது. சிவலிங்கத்தையும் சுருக்குப்போட்டு இழுத்தது. உடனே சிவபெருமான் கோபம்கொண்டு சிவலிங்கத்தைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டார்.

தன் மீதும், தன் பக்தன் மீதும் பாசக் கயிற்றை வீசிய எமதர்மனை, தன் காலால் எட்டி உதைத்து, சூலாயுதம் கொண்டு அவரை சம்ஹாரம் செய்தார். பின்னர் மார்க்கண்டேயரிடம், “குழந்தாய்.. நீ என்றும் பதினாறு வயதுடையவனாய், சிரஞ்சீவியாய் இருப்பாய்” என்று அருளி, மீண்டும் சிவலிங்கத்திலேயே மறைந்தார். இன்றும் திருக்கடவூர் மூலவ சிவலிங்கத்தில் எமனின் பாசக்கயிறு அமுத்தியதால் ஏற்பட்ட பள்ளம் இருப்பதை காண முடியும். மேலும் சிவலிங்கத்தின் உச்சியில், மார்கண்டேயருக்காக எமனை சம்ஹரிக்க பிளந்துவந்த வெடிப்பும் காணப்படுகிறது. எமதர்மன் இல்லாததால் பூமியில் உயிர்களின் எண்ணிக்கை கூடி, பூமி பாரம் அதிகரித்தது. எனவே தேவர்களின் வேண்டுகோள்படி, சிவபெருமான் மீண்டும் எமதர்மனை உயிர்ப்பித்தார் என்பது புராண வரலாறு.

எமனை அழித்த அமிர்தகடேஸ்வரர், இங்கு ‘கால சம்ஹார மூர்த்தி’ என்ற பெயரில் பாலாம்பிகையுடன் அருள் பாலிக்கிறார். காலசம்ஹார மூர்த்திக்கென பெரிய சபாமண்டபம் உள்ளது. அதனை ‘காலந்தக சபை’ என்கிறார்கள். இதில் தெற்கு பார்த்தவண்ணம், வலது காலை ஊன்றி, இடது காலை உயர்த்தி வீர நடனம் புரிபவராகவும், தன் கரத்தில் உள்ள சூலத்தை காலன் மீது பாய்ச்சியவாறும் காட்சி தருகிறார். அவரது காலடியில் ஆதிசேஷன் இருக்கிறது. ஈசன் காலடியில் எமன் வீழ்ந்து கிடக்க, குண்டோதரன் என்னும் பூதம், எமனின் காலில் கயிற்றைக்கட்டி இழுக்கின்றது. அருகில் மார்க்கண்டேயர், காலசம்ஹார மூர்த்தியை வணங்கிய நிலையில் உள்ளார். வெள்ளிப் பேழையில் மார்க்கண்டேயர் பூஜித்த மரகத லிங்கம் உள்ளது. இங்கு காலசம்ஹார மூர்த்தியை தரிசிக்கும் போது, காலனை பார்க்கமுடியாது. தீபாராதனையின் போது பீடத்தை திறப்பார்கள். அப்போது மட்டுமே எமனைக் காண முடியும். அதாவது எமன் இல்லாமல் கரத்தில் சூலத்துடன் சிவபெருமான் அருளும் திருக்கோலம் ‘சம்ஹார கோலம்’ என்றும், எமனுடன் ஈசன் அருள்வதை ‘உயிர்ப்பித்த கோலம்’ அதாவது ‘அனுக்கிரக கோலம்’ என்றும் கூறுகிறார்கள்.

அமைவிடம்

மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழியில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கடவூர் திருத்தலம் அமைந்துள்ளது.
Tags:    

Similar News