ஆன்மிகம்
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

கொரோனா பரவலால் நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவில் தேரோட்ட நிகழ்ச்சி ரத்து

Published On 2021-04-19 06:11 GMT   |   Update On 2021-04-19 06:11 GMT
நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் நகரில் பிரசித்தி பெற்ற கோவில்களில் கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவிலும் ஒன்றாகும். இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் 10 நாள் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் இந்த கோவிலின் 10 நாள் சித்திரை திருவிழா கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு தொடங்கியது.

கொடியேற்றத்தின் போது கோவில் கொடிமரம் அருகில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்கள் வெளியில் நின்று கோவில் கொடியேற்ற நிகழ்ச்சியை பக்தி பரவசத்தோடு கண்டுகளித்தனர்.

இந்த 10 நாள் திருவிழா வருகிற 26-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. வழக்கமாக 9-ம் நாள் திருவிழா அன்று தேரோட்டமும், 10-ம் நாள் திருவிழா அன்று தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேரோட்டமும், தெப்பத் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சாமி வாகன பவனியும் ரதவீதிகளில் நடைபெறாது என்றும், கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News