ஆன்மிகம்
மீனாட்சி அம்மன் கோவில்

எளிமையாக நடந்தது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2021-04-15 07:46 GMT   |   Update On 2021-04-15 07:46 GMT
முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் கோவில் திருவிழாக்களை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும்.

மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளால் மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இதை காண மதுரை மட்டுமின்றி, வெளி மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா மிகவும் எளிமையாக நடந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இந்த வருடம் சித்திரை திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் என மதுரை மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா பாதிப்பின் 2-வது அலை வீசுகிறது. இதனால் தமிழகத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது.

முக கவசம், சமூக இடை வெளியை பின்பற்றுதல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் கோவில் திருவிழாக்களை நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் கோவில் விழாக்களை நடத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதில் சில கோவில் திருவிழாக்கள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி இன்றி எளிமையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

சுவாமி-அம்மன் வீதி உலா, தேரோட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்தது. இது மதுரை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சித்திரை திருவிழாவை பக்தர்கள் பங்களிப்புடன் சிறப்பாக நடத்த வேண்டும் என மதுரையில் போராட் டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுந்தரேசுவரர் சன்னதி முன்பு உள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, தீபாராதனை காண்பித்து கொடியேற்றத்தை நடத்தினர்.

இதில் கோவில் இணை கமி‌ஷனர் செல்லத்துரை மற்றும் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவல் காரணமாக கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

சித்திரை திருவிழாவில் 22-ந்தேதி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி திக்கு விஜய மும், 24-ந்தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. 26-ந்தேதி வரை நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் காலை மற்றும் மாலையில் சுவாமி-அம்மன் புறப்பாடு, கோவிலுக்குள் உள்ள ஆடி வீதியில் நடைபெறுகிறது.
Tags:    

Similar News