ஆன்மிகம்
தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி பூஜை நடைபெற்ற காட்சி.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ராமேசுவரம் கோவிலுக்குள் தீர்த்தவாரி நிகழ்ச்சி

Published On 2021-04-15 07:13 GMT   |   Update On 2021-04-15 07:13 GMT
ராமேசுவரம் கோவில் சிவ தீர்த்தத்தில் சாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் சாமி அம்பாள், விநாயகர், முருகன், நந்திகேசுவரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுடன் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டான நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் சித்திரை மாத தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலை 11 மணிக்கு சாமி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலின் உள் பகுதியில் உள்ள சிவதீர்த்தபகுதிக்கு எழுந்தருளினர். தொடர்ந்து சிவ தீர்த்தத்தில் சாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் சாமி அம்பாள், விநாயகர், முருகன், நந்திகேசுவரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுடன் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பூஜையில் கோவிலின் மேலாளர் சீனிவாசன், சூப்பிரண்டுகள் ககாரின் ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ் புத்தாண்டான நேற்று ராமேசுவரம் கோவிலில் சாமி- அம்பாளை தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். வெளியூரை சேர்ந்த பக்தர்களைவிட உள்ளூர் பக்தர்களின் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது.

ஆண்டுதோறும் சித்திரை மாத தமிழ் புத்தாண்டு அன்று சாமி- அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்று அதன் பின்னர் கோவிலின் நான்கு ரத வீதிகளை சுற்றி வீதி உலா வருவது வழக்கம்.


ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியாக திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ராமேசுவரம் கோவிலில் சாமி அம்பாள் ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறாமல் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக தமிழ் புத்தாண்டு அன்று ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் தீர்த்தவாரி பூஜையும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News