ஆன்மிகம்
அஞ்சனாத்ரி மலை

அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்தாரா?: 13-ந்தேதி ஆதாரத்துடன் அறிவிப்பு

Published On 2021-04-10 08:48 GMT   |   Update On 2021-04-10 08:48 GMT
திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் அனுமன் பிறந்ததாக 13-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உரிய ஆதாரத்துடன் அறிவிக்கிறது.
திருமலை

திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் உள்ள ஜி.எல்.ஏ அலுவலகத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி பங்கேற்றுப் பேசினார்.

அவர் பேசியதாவது:-

திருமலையில் ஏழு மலைகள் உள்ளன. அதில் அஞ்சனாசலம் என்ற அஞ்சனாத்ரி மலை உள்ளது. அஞ்சனாதேவி தனக்கு ஒரு மகன் வேண்டும் என்பதற்காக தவம் இருந்த சிகரம். அஞ்சனாதேவிக்கு வாயு பகவான் மூலமாக ஒருமகன் பிறந்து ‘ஆஞ்சநேயன்’ என்று அழைக்கப்பட்டான். அஞ்சனாதேவியின் நினைவாக இச்சிகரம் அஞ்சனாசலம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் ஆஞ்சநேயர் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்தார் என்பதற்கான ஆதாரத்துடன் நிரூபிக்க 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு அறிஞர்களை கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா வேதப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சன்னிதானம் சுதர்சனசர்மா, சமஸ்கிருத தேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் முரளிதர சர்மா, பேராசிரியர்கள் ராணி சதாசிவமூர்த்தி, ஜனமதி ராமகிருஷ்ணா, சங்கரநாராயணா, இஸ்ரோ ஆராய்ச்சியாளர் மூர்த்திரெமிலா, ஆந்திர மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் விஜயகுமார், ஸ்ரீவெங்கடேஸ்வரா வேதப் பல்கலைக்கழக உறுப்பினரும், திட்ட அலுவலருமான விபீஷன சர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அந்தக் குழுவின் அறிஞர்கள் பல்வேறு கட்டங்களாக ஆழ்ந்த ஆராய்ச்சிகளை நடத்தி அனுமன் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்தார் என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்களை திரட்டி உள்ளனர். அதன் விவரம் விரைவில் புத்தக வடிவில் வெளியிடப்பட உள்ளது. அனுமன் அஞ்சனாத்ரி மலையில் பிறந்தார் என்பதை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வரும் 13-ந்தேதி யுகாதி பண்டிகை அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News