ஆன்மிகம்
அனுமன்

சிறப்பு வாய்ந்த அனுமனின் வடிவங்கள்

Published On 2021-01-15 09:01 GMT   |   Update On 2021-01-15 09:01 GMT
அனுமன் செய்த அற்புதங்களின் அடிப்படையில் அவரது சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
ராமாயண இதிகாசத்திலும், மகாபாரதத்தில் சில பகுதிகளிலும் காணப்படுபவர், அனுமன். ராமாயணத்தில் ராமனின் சிறந்த பக்தனாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். இந்த அனுமன், சிவபெருமானின் வடிவாக அவதரித்தவர் என்றும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அனுமன் செய்த அற்புதங்களின் அடிப்படையில் அவரது சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

வீர ஆஞ்சநேயர்

சிறுவயதில் தான் செய்த தவறின் காரணமாக, முனிவர் ஒருவரின் சாபத்தைப் பெற்றார், அனுமன். அந்த சாபத்தின் காரணமாக அவர் அதுவரைப் பெற்றிருந்த சக்திகள் அனைத்தையும் மறந்து போனார். அது ராமபிரானின் வருகைக்குப்பிறகே வெளிப்பட்டது. சீதையைக் கடத்திச் சென்ற ராவணன், அவளை தென்திசை நோக்கி தூக்கிச் சென்றதாக மட்டுமே தகவல் கிடைத்தது. ஆனால் சீதை எங்கிருக்கிறாள் என்பது எவருக்கும் தெரியவில்லை. அதனால் அதை அறிந்து கொண்டு வரும்படி அனுமனுக்கு உத்தரவிடப்பட்டது. அங்கு செல்ல நடுவில் இருக்கும் கடலைக் கடந்து செல்ல வேண்டும். அது எவராலும் சாத்தியமில்லையே.. அனுமனும் கூட ஒருநொடி என்ன செய்வது என்று திகைத்து நின்றார். அப்போது ஜாம்பவான், அனுமனின் கடந்த காலத்தையும், முனிவரின் சாபத்தால் அவர் மறந்த சக்திகளை பற்றியும் எடுத்துரைத்தார். இதையடுத்து அவரது வீரமும், வலிமையும் நினைவுக்கு வந்து விஸ்வரூப வடிவம் எடுத்தார். இந்த வடிவத்தையே, ‘வீர ஆஞ்சநேயர்’ என்று அழைக்கிறார்கள். இவரை வழிபட்டால் தைரியம் வந்து சேரும்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக, ராவணனுக்கும் ராமனுக்கும் இடையே போர் நடைபெற்றது. ராவணனின் தரப்பில் பல அரக்கர்கள், மாய மந்திரங்களின் மூலமாக ராமரின் படையை தகர்க்க நினைத்தனர். அவர்களில் ஒருவன்தான், ‘மயில் ராவணன்.’ அவனை அழிப்பதற்காக ஆஞ்சநேயர் எடுத்த அவதாரமே ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ வடிவமாகும். இந்த அனுமனை வழிபடுவதால், பில்லி, சூன்யம், மாய மந்திரங்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

யோக ஆஞ்சநேயர்

ராமநாமத்தைக் கேட்பதற்காகவே, பூலோகத்தில் தங்கியவர் ஆஞ்சநேயர். சீதாதேவியிடம் இருந்து சிரஞ்சீவியாக வாழும் வரத்தைப் பெற்ற அனுமன், இன்றளவும் அரூபமாக இந்த பூலோகத்தில் வாழ்ந்து வருவதாக ஐதீகம். பக்தர்கள் கூறும் ராமநாமம் தன்னுடைய காதில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய தவம் கலையாமல், ராமனை நினைத்தபடியே இருக்க வேண்டும் என்பதற்காகவும், யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கும் அனுமனை, ‘யோக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கிறோம். இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வந்தால், மன அமைதியும், மன உறுதியும் கிடைக்கும்.

பக்த ஆஞ்சநேயர்

ராமரின் முதன்மை பக்தனாக புகழப்படுபவர், அனுமன். ராமர் ஒரு காரியத்தை சொல்லும் முன்பாகவே, குறிப்பறிந்து அதைச் செய்து முடிக்கும் ராமரின் தூதனாகவும் அவர் இருந்தார். ராமரை, எங்கும் எதிலும் காண்பவர் அனுமன். ராமநாமம் சொல்லி வணங்கும் பக்தர்களுக்கு அனுமனின் ஆசீர்வாதம் நிச்சயமாக உண்டு. ராம அவதாரம் முடிந்து வைகுண்டம் திரும்ப நினைத்த ராமபிரான், அனுமனையும் தன்னுடன் வந்துவிடும்படி அழைத்தார். ஆனால் ராமநாமம் எங்கும் ஒலிக்கப் போகும் பூலோகத்தில் அதைக் கேட்டபடியே இருப்பதே தனக்கு ஆனந்தம் என்று மறுத்துவிட்டார், அனுமன். அப்படிப்பட்ட அனுமன், தன்னுடைய இரு கரங்களையும் கூப்பியபடி அருளும் வடிவத்தை ‘பக்த ஆஞ்சநேயர்’ என்கிறார்கள். இவரை வழிபட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும்.

சஞ்சீவி ஆஞ்சநேயர்

ராவணன் அனுப்பிய படைகளுடன், ராம- லட்சுமணர்களும், வானரப் படையினரும் போரிட்டுக் கொண்டிருந்தனர். அன்று ராவணனின் மகன் இந்திரஜித் போரிட வந்திருந்தான். அவன் மாயக் கலைகளில் வல்லவன். அவன் மறைந்திருந்து எய்த நாகாஸ்திரம் ஒன்று தாக்கியதில், லட்சுமணன் மூர்ச்சை அடைந்தான். லட்சுமணனை பிழைக்க வைக்க அரிய வகை மூலிகைகள் தேவைப்பட்டது. அது சஞ்சீவி மலையில் இருப்பதாகவும், அதைக் கொண்டு வரும்படியும் அனுமன் பணிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு சென்ற அனுமன், மூலிகையைத் தேடித் தேடி பறிக்க நேரம் இல்லாமல், சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார். மலையை தன் கையில் தாங்கியபடி பறக்கும் ஆஞ்சநேயரை, ‘சஞ்சீவி அனுமன்’ என்று அழைப்பார்கள். இவரை வழிபாடு செய்வதால், நோய் நொடிகள் விலகும்.
Tags:    

Similar News