ஆன்மிகம்
மாட்டுப் பொங்கல்... கதையும்.. காரணமும்..

மாட்டுப் பொங்கல்... கதையும்.. காரணமும்..

Published On 2021-01-15 03:55 GMT   |   Update On 2021-01-15 03:55 GMT
நந்தீசுவரர் பூலோகத்துக்கு காளை வடிவத்தில் வந்து, விவசாயத்துக்கும், உழவர்களுக்கும் களைப்பில்லாமல் உழைத்து வருகிறார். மாட்டுப்பொங்கல் உருவான கதையை அறிந்து கொள்ளலாம்.
கைலாயத்தில் ஒருநாள்..! சிவபெருமான் நந்தீசுவரரை அழைத்து அவரிடம் ஒரு கட்டளை பிறப்பித்தார்.

‘‘பூலோகம் சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம் மாதம் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து, ஒரு நாள் மட்டும் உணவு சாப்பிடச் சொல்லுங்கள்’’ என்று கட்டளையிட்டார்.

நந்தீசுவரரும் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு பூலோகம் சென்றார். வரும் வழியிலேயே சிவபெருமானின் கட்டளையில் ஒரு பாதி நந்தீசுவரருக்கு மறந்து விடுகிறது. அவர் மக்களிடம் சென்று, ‘‘மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளியுங்கள், மாதம் முழுவதும் உணவு உண்ணுங்கள். இது சிவபெருமானின் கட்டளை’’ என்று மாற்றிக் கூறிவிட்டார். இதனால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பசியால் வாடுவதற்கு நந்தீசுவரர்தான் காரணம் என்று சிவபெருமான் சினங்கொண்டார். உடனே ‘‘நீ காளையாக மாறி பூலோகத்துக்கு செல்வாயாக, மக்களுக்காக நீ கடுமையாக உழைப்பாயாக...’’ என்று நந்தீசுவரருக்கு சாபம் கொடுத்தார்.

‘‘நான் செய்த தவறுக்காக இந்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். மக்களுக்காக உழைத்து ஓடாய் தேய்வேன். ஆனால் எனது உழைப்பை மக்கள் எண்ணிப்பார்த்து ஒரு நாள் விழாவாக கொண்டாட வேண்டும். அதற்கு அருள் புரியுங்கள்’’ என்று சிவபெருமானிடம், நந்தீசுவரர் வேண்டினார்.

அதற்கு சிவபெருமான், ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் மக்கள் ‘மாட்டுப் பொங்கல்’ கொண்டாடி உனது உழைப்பை போற்றுவார்கள் என்று கூறினார். பின்னர் நந்தீசுவரர் பூலோகத்துக்கு காளை வடிவத்தில் வந்து, விவசாயத்துக்கும், உழவர்களுக்கும் களைப்பில்லாமல் உழைத்து வருகிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த நந்திக்காக கொண்டாடுவதே, மாட்டுப் பொங்கலாகும்!
Tags:    

Similar News