ஆன்மிகம்
பூரி ஜெகநாதர் ரதயாத்திரை( பழைய கோப்பு படம்)

பூரி ஜெகநாதர் ரதயாத்திரையில் யானைகளை பயன்படுத்த விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு

Published On 2020-06-18 09:31 IST   |   Update On 2020-06-18 09:31:00 IST
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ரதங்களை இழுக்க ராட்சத எந்திரங்கள் அல்லது யானைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் யானைகள் மூலம் ரதங்களை இழுக்க விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புவனேஸ்வரம் :

ஒடிசாவின் பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை புகழ்பெற்றது. இந்த ஆண்டின் ரத யாத்திரை வருகிற 23-ந்தேதி நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவை கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ரதங்களை இழுக்க ராட்சத எந்திரங்கள் அல்லது யானைகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் யானைகள் மூலம் ரதங்களை இழுக்க விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விலங்கு நல வாரிய ஒடிசா மாநில செயலாளர் ஜிபன் பல்லவ் தாஸ் கூறுகையில், ‘கடந்த 2002-ம் ஆண்டில் ரத யாத்திரையில் பங்கேற்ற லட்சுமி என்ற யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

திருவிழாவின்போது பட்டாசு வெடிப்பதாலும், மேளதாளங்கள் இசைப்பதாலும் ஏற்படும் பயங்கர சத்தத்தால் யானைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் யானைகளை பயன்படுத்துவதை ஒடிசா அரசு கைவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Similar News