ஆன்மிகம்

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் தேரோட்டம்

Published On 2019-03-23 03:49 GMT   |   Update On 2019-03-23 03:49 GMT
ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்ம உற்சவ திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. பெரிய தேர் பழுதடைந்து உள்ளதால் சின்ன தேரில் தேரோட்டம் நடந்தது.
பாளையங்கோட்டை வேதநாராயணர், அழகியமன்னார், ராஜகோபால சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரம்ம உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடந்தது.

5-ம் திருவிழாவன்று காலையில் வேதநாராயணர், வேதவல்லி, குமுதவல்லி தாயாருக்கும், அழகியமன்னார், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும், ராஜகோபால சுவாமி, ருக்மணி, சத்யபாமா தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் இரவில் கருட வாகனத்தில் ராஜகோபால், அழகியமன்னார் வீதி உலா நடந்தது.

நேற்று முன்தினம் இரவில் சுவாமி, தேர் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. பெரிய தேர் பழுதடைந்து உள்ளதால் சின்ன தேரில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு ராஜகோபால சுவாமியுடன் ருக்மணி, சத்யபாமா தாயாரும் தேருக்கு எழுந்தருளினார்கள். காலை 7.35 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. இரவில் சுவாமி தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் பல்லக்கில் வீதிஉலா நடந்தது.

இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளி தாமிரபரணி ஆற்றுக்கு செல்கிறார். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது. இரவில் சப்தாவரணத்தில் அழகியமன்னார், ராஜகோபால சுவாமி வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News