ஆன்மிகம்

பண்ணாரி கோவிலில் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா

Published On 2019-03-22 04:06 GMT   |   Update On 2019-03-22 04:06 GMT
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது.
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 12-ந் தேதி இரவு குழிக்கம்பம் சாட்டப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 19-ந் தேதி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று முன்தினம் காலை பண்ணாரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மனை மலர் பல்லக்கில் வைத்து மாட்டு வண்டி மூலம் கோவிலை சுற்றி வீதி உலாவாக கொண்டு வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் குழிக்கம்பத்தில் எரியும் நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த குழியில் வாழை மரம் நடப்பட்டது. பின்னர் கோவில் முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய கைகளில் கட்டியிருந்த மஞ்சள் கயிற்றை அவிழ்த்து அந்த வாழை மரத்தில் கட்டினார்கள். இதையடுத்து வாழை மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிறகு அந்த வாழை மரத்தை பிடுங்கி மேள, தாளம் முழங்க பக்தர்கள் தோளில் சுமந்தபடி அங்குள்ள தெப்பக்குளத்தில் கொண்டு சென்று போட்டார்கள். இதைத்தொடர்ந்து மஞ்சள் நீர் உற்சவம் நடைபெற்றது.
Tags:    

Similar News