ஆன்மிகம்

மயான கொள்ளை திருவிழா

Published On 2019-03-15 03:21 GMT   |   Update On 2019-03-15 03:21 GMT
மாசி மாதம் சிவராத்திரி பண்டிகையை தொடர்ந்து புதுவை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
மாசி மாதம் சிவராத்திரி பண்டிகையை தொடர்ந்து புதுவை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தட்சனின் யாகத்தில் விழுந்த தாட்சாயினி ஆக்ரோஷ ரூபம் கொண்டு எழுந்த வடிவமே அங்காளம்மன் என்றும், அவளை அடக்கி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் விடுவித்து மயானத்தை சூறையாட சிவன் அனுமதித்தார் என்று புராணக்கதைகள் கூறுகிறது.

பிரம்மஹத்தி தோஷம்

ஐந்து தலைகளுடன் விளங்கிய பிரம்மன் திலோத்தமை என்ற தேவ மங்கையின் அழகில் மயங்கி அவளை துரத்தினான். திலோத்தமை கயிலாயத்தில் அடைக்கலம் புகுந்தாள். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்க பிரம்மனின் ஆணவத்தை அழிக்க விஷ்ணுவின் ஆலோசனைப்படி பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் வெட்டி எறிந்தார். அது சிவபெருமானின் கைகளில் ஒட்டிக்கொண்டது. எவ்வளவோ முயன்றும் அதை சிவபெருமானால் தட்டிவிட முடியவில்லை.அதனை தன் கையிலேயே தாங்கிக் கொண்டார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது.

அதனையறிந்த பிரம்மனின் மனைவியான சரஸ்வதி, சிவபெருமான் பிச்சை எடுக்கும் கோலத்தையும், அன்னை பார்வதி அலங்கோல வடிவத்தையும் அடைய சாபமிட்டார். அதையடுத்து விஷ்ணு, தன் தங்கை பார்வதியிடம், நீ மலையரசன் பட்டினத்தில் (மேல்மலையனூர்) பூங்காவனத்துப் புற்றில் பாம்பு வடிவில் இருக்கும்பொழுது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என வழிகாட்டினார். அகோர உருவம் கொண்ட பார்வதி நாடெல்லாம் அலைந்து திரிந்து திருவண்ணாமலை வந்து சேர்ந்தாள். அன்னை புற்று வடிவமெடுத்து, மேல்மலையனூர் அரண்மனையில் உள்ள பூங்காவனத்தில் ஐந்து தலை நாகமாக வாழ்ந்து வந்தாள்.

மயான கொள்ளை

அந்த சமயத்தில் மலையனூர் வந்த சிவனின் குரல் கேட்ட பார்வதி, விஷ்ணுவை மனதில் நினைத்து தியானம் செய்தாள். விஷ்ணு கூறியபடி விநாயகப்பெருமானை காவல் நிற்க செய்து, அன்னபூரணி மூலம் சுவையான உணவை சமைத்து அதை மூன்று கவளமாக்கினாள். இரண்டு கவளங்களைச் சிவனின் கையில் இருந்த கபாலத்திற்கு வழங்கினாள். அதன் சுவையில் மயங்கிய கபாலம் ஆசை தீர உண்டது. மூன்றாவது கவளத்தை வேண்டுமென்றே கீழே தவற விட சுவையில் மயங்கிய கபாலம் தரை இறங்கியது.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்த அன்னை அங்காள பரமேஸ்வரி, கபாலத்தைத் தன் காலால் நசுக்கித் தரையில் அழுத்தினாள். உடனே சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சுயநிலையை அடைந்தார். இந்த ஐதீகத்தை நினைவுபடுத்தும் வகையிலேயே மாசி மாதம் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

மயான கொள்ளை திருவிழாவின் போது அம்மனின் முன்பு பிரம்ம கபாலத்தை கையில் ஏந்தி கோவில் பூசாரிகள் பக்தி பரவசத்துடன் ஆடியபடி மயானத்திற்கு செல்வர். இதையடுத்து அம்மன் மயானத்தில் எழுந்தருளியவுடன் அங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கும் சுண்டல், கொழுக்கட்டை, தானியங்கள் ஆகியவற்றை வாரி இறைத்து மயான கொள்ளை திருவிழா நடை பெறும்.

விழாவின்போது அங்காளம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். முன்னதாக அங்கு கூடியிருக்கும் திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தானியங்கள், பழங்கள், சுண்டல், கொழுக்கட்டை மற்றும் சில்லரை நாணயங்களை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பலர், அவற்றை பிரசாதமாக எடுத்து செல்வர்.

முன்னதாக அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அம்மன் வேடம் அணிந்து வருவார்கள். இதில் சிலர் நாக்கு, தாடையில் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் மயானத்துக்கு வரும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பலர் அருள் வந்து ஆடுவர். அவர்களில் சிலர் சேவல், கோழியை கடித்து, அதன் ரத்தத்தை குடிப்பது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க செய்யும். அருள் வந்து ஆடியவர்களின் முன்பு பலர் விழுந்து வணங்குவார்கள். அப்போது அவர்கள் மீது, சாமி ஆடியவர்கள் நடந்து சென்று ஆசி வழங்குவர்.

நேர்த்திக்கடன்

தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 11-ந் தேதி ரணகளிப்பு நிகழ்ச்சியும் மறுநாள் மயான கொள்ளை மற்றும் தேர் திருவிழாவும் நடைபெற்றது.

இதையொட்டி மாலை 5.30 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. இதில் அரசு கொறடா அனந்தராமன், பா.ஜனதா கட்சியின் துணை தலைவர் செல்வம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக கொழுக்கட்டை, மணிலா, ரூபாய் நோட்டுகள், காய்கறிகளை அம்மனை நோக்கி வீசி வழிபட்டனர்.

அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி சுடலை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தேரை பக்தர்கள் அந்த பகுதியில் உள்ள மயானத்திற்கு இழுத்துச்சென்றனர். பின்னர் அங்கு மயான கொள்ளை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News