ஆன்மிகம்
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்ற காட்சி.

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம்

Published On 2019-03-02 10:22 IST   |   Update On 2019-03-02 10:22:00 IST
திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் நடந்த தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலாக விளங்குவது, உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் 7 நாட்கள் தெப்ப உற்வச திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தெப்ப உற்சவ திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. அன்று முதல் உற்சவர் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று இரவு நடந்தது. முன்னதாக மாலை 5 மணிக்கு கமலவல்லி நாச்சியார் புறப்பாடாகி தெப்ப மண்டபம் வந்தடைந்தார். அங்கு, அமுது படிகள் கண்டருளிய பின்னர் இரவு 7 மணிக்கு மேல் தெப்ப உற்சவ நிகழ்ச்சி தொடங்கியது. கமலவல்லி நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில், தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இந்த தெப்ப உற்சவ நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தெப்பத்தில் இருந்து கரை சேர்ந்து தெப்ப மண்டபத்துக்கு கமலவல்லி நாச்சியார் வந்தடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து பல்லக்கில் புறப்பட்டு வீதியுலா வந்து, இரவு 10 மணிக்கு மேல் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

தெப்ப திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியான இன்று(சனிக்கிழமை) இரவு பந்தல் காட்சி நடக்கிறது. அதை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு உற்சவர் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபத்தில் திருவாராதனம் கண்டருளுகிறார். அதன் பின்னர் இரவு 7.30 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

இரவு 9.30 மணிக்கு மீண்டும் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தை அடைகிறார். அத்துடன் தெப்ப உற்சவ விழா நிறைவு பெறுகிறது. 

Similar News