ஆன்மிகம்
பழனி முருகன் கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பழனி முருகன் கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம்

Published On 2018-12-28 03:16 GMT   |   Update On 2018-12-28 03:16 GMT
பக்தர்கள் நலனுக்காக பழனி முருகன் கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 15-ந் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 20-ந் தேதி இரவு திருக்கல்யாணமும், வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், 21-ந் தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது. 24-ந் தேதி தெப்பத்தேர் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த விழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். அவர்கள் பாதுகாப்புடனும், நலமுடனும் வந்து சாமி தரிசனம் செய்வதற்கும், திரு விழாவுக்கான அனுமதி பெறுவதற்கும் மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் நேற்று சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

முன்னதாக காலை 7 மணிக்கு மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் விநாயகர் பூஜை, 9 கலசங்கள் வைத்து புன்னியாக வாஜனம், கலச பூஜை, பாராயணம், கணபதி ஹோமம், ஆனந்த விநாயகருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகரிடம் தைப்பூச திருவிழாவுக்குஅனுமதிபெறப்பட்டது.

தொடர்ந்து மூலவர் சன்னதியில் தண்டாயுதபாணி சுவாமியிடம் அனுமதி பெறும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றது. பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்துக்குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் குருக்கள்கள் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து செய்திருந்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை வடக்கு கிரிவீதியில் வீரதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், பிரார்த்தனையும், வருகிற 31-ந் தேதி கிழக்கு கிரிவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், பிரார்த்தனையும் நடக்கிறது. வருகிற 2-ந் தேதி வனதுர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜையும், 3-ந் தேதி மாலையில் பாதவிநாயகர் கோவில், கன்னிமார், கருப்பணசுவாமி கோவில், பைரவ- பைரவி ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் பலிபூஜை நடக்கிறது.

4-ந்தேதி மேற்கு கிரிவீதியில் உள்ள மகிசாசுரமர்த்தினி கோவிலில் அபிஷேகம், அலங் காரம், பிரார்த்தனையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்துள்ளார்கள். 
Tags:    

Similar News