ஆன்மிகம்

வழிபட்டால்.... வாழ வைக்கும்.... வக்கிர காளியம்மன்

Published On 2018-12-24 08:47 GMT   |   Update On 2018-12-24 08:47 GMT
தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.
“சந்திர சேகரனே அருளாயென்று தண்விசும்பில்
இந்திரனும்முதலா இமையத்தவள் தொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத்தான் இடம் வக்கரையே”

-திருஞானசம்பந்தர்

தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.

இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.

பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது.

ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது.
கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார்.

இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர். 
Tags:    

Similar News