ஆன்மிகம்

அச்சன்கோவில் ஆபரண பெட்டி நாளை தென்காசி வருகை

Published On 2018-12-15 09:41 IST   |   Update On 2018-12-15 09:41:00 IST
அச்சன்கோவில் ஆபரண பெட்டி நாளை தென்காசி வருகிறது.இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில்களில் ஒன்றான தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் ஐயப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும்.

இந்த ஆபரண பெட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்படுகிறது. அந்த பெட்டி தென்காசி வழியாக அச்சன்கோவில் கொண்டு செல்லப்படும். அன்று மதியம் 2 மணிக்கு தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.

ஆபரண பெட்டி வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வரவேற்பு கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.அரிகரன், செயலாளர் மாடசாமி, பொருளாளர் சுப்பாராஜ், ஆலோசகர் மாரிமுத்து உள்பட பலர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News