ஆன்மிகம்
பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன், பிரியநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

Published On 2018-12-12 04:02 GMT   |   Update On 2018-12-12 04:02 GMT
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையொட்டி நேற்று வருடாபிஷேக விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவில் மண்டபத்தில் 6 பிரதான கலசங்கள் மற்றும் 10 உப கலசங்களுடன் 16 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது.

வருடாபிஷேக விழாவையொட்டி நேற்று இரவு 6 மணிக்குமேல் பெரியநாயகி அம்மன்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் அமைக் கப்பட்டிருந்த திருமண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது. அதையொட்டி பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன், பிரியநாயகி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் திருமண மேடையில் வைதீக முறைப்படி யாகம் வளர்த்து பல்வேறு சடங்குகள் நடத்தப்பட்டு, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன், பிரியநாயகி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன், சித்தனாதன் சன்ஸ் செந்தில், கண்பத் கிராண்ட் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில்குமார், திருப்பூர் லாட்ஜ் மகேஷ் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பின் பெரியாவுடையார், பெரியநாயகிஅம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், பிரியநாயகி அம்மன் அன்னப்பிச்சை வாகனத்திலும், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் பெரியதங்கமயில் வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், வீரபாகு வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சின்ன ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விழா ஏற்பாடுகள் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
Tags:    

Similar News