ஆன்மிகம்
ஆண்டவன்உத்தரவு பெட்டியில் கதிர் அறுக்கும் அரிவாள்கள் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கதிர் அறுக்கும் அரிவாள் வைத்து பூஜை

Published On 2018-10-27 03:29 GMT   |   Update On 2018-10-27 03:29 GMT
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஏற்கனவே இருந்த செம்மண் அகற்றப்பட்டு கதிர் அறுக்கும் அரிவாள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை மீது சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவுப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை ஆண்டவன் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார்.

இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார். கோவில் நிர்வாகம் சார்பில் சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை என 2 பூக்கள் வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளை பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பொருள் ஆண்டவன் உத்தரவுபெட்டியில் வைக்கப்பட்டு தொடர்ந்து தினமும் பூஜை செய்யப்படும்.

இந்த ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 17-ந்தேதி முதல் செம்மண் வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்றுமுதல் செம்மண் அகற்றப்பட்டு 3 கதிர் அரிவாள் (கறுக்கருவாள்) வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இதை திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுங்கிலியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பி.வேலுச்சாமி (வயது 80) என்பவர் முருகன் தனது கனவில் வந்து கூறியதாக கூறினார். இதையடுத்து பூ போட்டு பார்த்து கதிர் அரிவாள்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இதுபற்றி பக்தர்கள் தரப்பில் கூறுகையில் “சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கதிர் அறுக்கும் அரிவாள் 3 வைக்கப்பட்டுள்ளது. இது சமுதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து போகபோகத்தான் தெரிய வரும்” என தெரிவித்தனர்.
Tags:    

Similar News