ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளிய நம்பெருமாள்

Published On 2018-08-04 02:26 GMT   |   Update On 2018-08-04 02:26 GMT
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நம்பெருமாள் எழுந்தருளி, காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நம்பெருமாள் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளி, காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் கோவிலில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு தங்க பல்லக்கில் புறப்பட்டார். வழிநடை உபயங்கள் கண்டருளினார். அம்மா மண்டபத்திற்கு மதியம் 1 மணி அளவில் வந்தடைந்தார்.

படித்துறை வரை நம்பெருமாள் சென்றார். அங்கு பாய்ந்தோடும் காவிரியில் பட்டர்கள் வேத மந்திரங்கள் சிறிது நேரம் ஓதினர். அதன்பின் நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மாலை 4.45 மணி அளவில் காவிரித்தாய்க்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சந்தனம், சேலை, மாலை உள்பட மங்கல பொருட்களை யானை மீது தாம்பூல தட்டில் வைத்து பட்டர்கள் எடுத்து வந்தனர். அம்மா மண்டபம் படித்துறையில் யானை மீது இருந்து சீர்வரிசை பொருட்களை காவிரி ஆற்றில் தூக்கி வீசினர். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்ட பின் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணிக்கு நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மேல அடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
Tags:    

Similar News