ஆன்மிகம்

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழா நாளை நடக்கிறது

Published On 2018-05-12 08:16 GMT   |   Update On 2018-05-12 08:16 GMT
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நாளை நடக்கிறது.
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடு, மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்ற பின் காலை 6 மணிக்கு பால்குட விழா கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் வேப்பிலை மாரியம்மன் கோவில் பின்புறமுள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடத்துடன் கூடுவார்கள்.

காலை 7 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வேப்பிலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் மறைந்த நாட்டாண்மை வீராச்சாமி குடும்பத்தினர் மேளதாளம் முழங்க பால்குடம் எடுத்து முன்னே வர பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் வே.பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வருவார்கள்.

மேலும் பலர் வேண்டுதலை நிறைவேற்ற கரும்பு தொட்டிலில் குழந்தைகளை கொண்டு வருவார்கள். பால்குடம் வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு காலை 8.15 மணிக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு முத்துப்பலக்கில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பால்குட விழாவை சிறப்பாக நடத்திட வேப்பிலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் வே.பிரபாகர் தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதேபோல் பக்தர்கள் வசதிக்காக குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை மணப்பாறை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையிலான போலீசார் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News