ஆன்மிகம்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா 20-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-05-10 07:52 GMT   |   Update On 2018-05-10 07:52 GMT
கடலூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா வருகிற 20-ந்தேதி ( ஞாயிற்று கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கடலூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஸ்ரீவண்ணாரமாரியம்மன் திருவிழா தொடங்குகிறது. இதையடுத்து 14-ந் தேதி இரவு 11 மணிக்கு எல்லை கட்டுதல் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து 15-ந் தேதி பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் உற்சவமும் நடைபெறுகிறது. 18-ந் தேதி பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வீதிஉலாவும் நடக்கிறது.

வருகிற 19-ந் தேதி விநாயகருக்கு ஒரு நாள் உற்சவம் நடைபெறுகிறது. பின்னர் பாடலீஸ்வரர் கோவிலில் 20-ந் தேதி வைகாசி பெருவிழா கொடியேற்றம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கோவில் கொடிமரத்தில் பெருவிழா கொடி ஏற்றப்படுகிறது. விழாவை தொடர்ந்து தினமும் காலை, மாலை இருவேளைகளும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெறுகிறது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 24-ந்தேதி அதிகாரநந்தி கோபுர தரிசன நிகழ்ச்சியும், இரவு தெருவடைச்சான் உற்சவமும், 26-ந்தேதி கைலாசவாகனம் கோபுர தரிசனமும், இரவு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

தொடர்ந்து 28-ந் தேதி விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 29-ந் தேதி காலை தீர்த்தவாரி உற்சவமும், இரவு முத்து பல்லக்கில் சாமி வீதிஉலாவும், 30-ந் தேதி இரவு முருகன் தெப்ப உற்சவமும், 31-ந் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சியும், இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News