ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் நாளை நடக்கிறது

Published On 2018-01-29 14:40 IST   |   Update On 2018-01-29 14:40:00 IST
ஸ்ரீரங்கம் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தைத்தேரோட்டம் நாளை நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் திருநாளான கடந்த 25-ந் தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்திரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று (திங்கட்கிழமை) காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். 4.30 மணி முதல் 5.15 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.

31-ந் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான பிப்ரவரி 1-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ரத்தினவேலு, அறங்காவலர்கள் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேச உத்தமநம்பி மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Similar News