ஆன்மிகம்
சங்கரநாராயண சுவாமி கோவிலில் கொடிமரத்திற்கு தீபாராதனை நடந்ததை படத்தில் காணலாம்.

சங்கரன்கோவில், பாபநாசம் கோவில்களில் திருவாதிரை திருவிழா தொடங்கியது

Published On 2017-12-25 04:14 GMT   |   Update On 2017-12-25 04:14 GMT
பாபநாசம் பாபநாசநாதர், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே பாபநாசம் பாபநாசநாதர்- உலகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவாதிரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு இருந்த கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி- அம்பாளுக்கு தீபாராதனை மற்றும் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. 7 மற்றும் 8-ம் திருநாளில் சுவாமி நடராஜர் வீதி உலா வருதல் நடக்கிறது. வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.


பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்த போது எடுத்த படம்.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கரலிங்கசுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 6.25 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் மற்றும் சுவாமி- அம்பாள் வீதிஉலா நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. திருவாதிரையின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் வருகிற 2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News