ஆன்மிகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடிப்பட்டம் யானை மீது வீதிஉலா வந்தபோது எடுத்த படம்.

திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா: கொடிப்பட்டம் யானை மீது வீதிஉலா

Published On 2017-08-12 10:38 IST   |   Update On 2017-08-12 10:38:00 IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு, கொடிப்பட்டம் யானை மீது வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 10-ம் திருநாளான வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது.

ஆவணி திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலையில் கொடிப்பட்டம் யானை மீது வீதிஉலா நடந்தது. இதையொட்டி திருச்செந்தூர் வடக்கு ரதவீதி 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் யானை மீது கொடிப்பட்டத்தை தானாபதி அய்யர் கையில் ஏந்தியவாறு, எட்டு வீதிகளிலும் உலா வந்து, கோவிலுக்கு சென்றார்.

விழாவில் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் பத்மநாபபிள்ளை, மேலாளர் அய்யாபிள்ளை, ஸ்தலத்தார் சபை தலைவர் குமார், கைங்கரிய சபா தலைவர் சேது ஆண்டி அய்யர், பிராமணர் சங்க ஆலோசகர் கிருஷ்ணன், 14 ஊர் செங்குந்த உறவின் முறை சங்க தலைவர் சிவராமலிங்கம், செயலாளர் அய்யனார், பொருளாளர் மாரியப்பன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்சோதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Similar News