ஆன்மிகம்
பக்தர்கள் அலகு குத்தி வாகனத்தில் ஊர்வலமாக வந்தபோது எடுத்தபடம்.

சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

Published On 2017-04-06 04:24 GMT   |   Update On 2017-04-06 04:24 GMT
சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் கோவிலில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
சேலம் குமாரசாமிப்பட்டியில் பிரசித்திபெற்ற எல்லைப்பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் திரளான பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து இரவில் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து எல்லைப்பிடாரியம்மன் மற்றும் பரிவாரங்களுடன் கோவிலுக்கு அழைத்து வரும் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை கோவிலில் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அவர்கள் பொங்கலை கோவிலில் உள்ள அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் ஊர் பெரிய கிணறு அருகில் இருந்து அலகு குத்தி ஊர்வலமாக எல்லைப்பிடாரியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று திரளான பெண்கள் பொங்கல் வைத்தபோது எடுத்தபடம்.

பக்தர்கள் பலர் டிராக்டர், மினிலாரி போன்ற பல்வேறு வாகனங்களில் விமான அலகு குத்தி அந்தரத்தில் நின்றபடி கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். உடலில் வாள் போன்ற ஆயுதங்களாலும், காவடி அலகு குத்தப்பட்டும் இருந்தன. மேலும் சில பக்தர்கள் அம்மன் வேடமணிந்து அலகு குத்தியப்படி கோவிலுக்கு வந்தனர். இதன் காரணமாக சேலம் செரி ரோட்டில் பகலில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து சக்தி பூங்கரகத்துடன் அம்மன் ஊர்வலமும் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) முக்கிய நிகழ்வான அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதையொட்டி மதியம் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டும், சின்னத்திருப்பதியில் அம்மனுக்கு பூ அலங்கார பூஜையும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் சின்னத்திருப்பதி பெருமாள் கோவில் சென்றுவர பக்தர்களும், பெண்களும் நீராடி மஞ்சள் ஆடை அணிந்து ஊர்வலமாக வந்து அக்னி குண்டம் இறங்குகிறார்கள். இரவு புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் ஊர்வலம் நடக்கிறது.


திருவிழாவையொட்டி கோவில் அருகே 21 அடியில் எல்லைப்பிடாரியம்மன் வண்ண பூக்களால் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.


நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலமும், தொடர்ந்து காலை 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம் ஊர்வலமும் நடக்கிறது. காலை 8 மணிக்கு அம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகமும், காலை 10 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மனுக்கு முத்தங்கி அலங்காரமும், தொடர்ந்து வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது. பக்தர்கள் பல்வேறு சாமி வேடம் அணிந்து மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் வண்டிகளில் ஊர்வலமாக கோவில் நோக்கி வருவார்கள். மாலை 5 மணிக்கு அம்மனுக்கு 108 விசேஷ சங்கு பூஜை நடைபெறும். இரவு அம்மன் ஊர்வலம் நடக்கிறது.

8-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு அம்மன் அபிஷேக ஆராதனையும், இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சத்தாபரணம் நிகழ்ச்சி நடக்கிறது.

9-ந் தேதி காலை 7 மணிக்கு மஞ்சள் நீராடி அம்மன் புஷ்ப பல்லக்கில் ஊர்வலம் நடக்கிறது. 10-ந் தேதி மாலை 5 மணிக்கு 510 குத்துவிளக்கு பூஜையும், 2 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. 11-ந் தேதி அம்மனுக்கு காவு பூஜை செய்து கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் கோவில் திருவிழா நிறைவு பெறுகிறது.

Similar News