ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி விழா: திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2017-01-09 13:31 IST   |   Update On 2017-01-09 13:31:00 IST
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் அருகே உள்ளது புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில். 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 29-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து தினசரி அவுஷதகிரி மலையில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்துக்கு தேவநாதசுவாமி, தேசிகர், 12 ஆழ்வார்கள் எழுந்தருளினர். பின்னர் விசேஷ பூஜை, ஆராதனை, சேவை சாற்றுமுறைகள் நடைபெற்றது. நேற்று முன்தினத்துடன் பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்றது.

அதை தொடர்ந்து நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு மார்கழி மாத சிறப்பு பூஜைகளும், பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்த பின் மூலஸ்தான உள்பிரகாரத்தில் தேவநாதசுவாமி வலம் வந்தார். அதை தொடர்ந்து சொர்க்கவாசல் கதவுகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

அதன்பின் காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேவநாதசுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். தொடர்ந்து தேசிகர் எதிர்சேவை நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்று கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

இதன்பின் நாச்சியார்களுடன் தேவநாதசுவாமி, கோவிலின் வெளிபிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பிறகு ராப்பத்து மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் உலா நடந்தது.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையில் செயல் அலுவலர் ராஜாசரவணகுமாரும், கோவில் பணியாளர்களும் செய்திருந்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை ஜெயபிரகாஷ் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்து இருந்தனர். இதை தொடர்ந்து மாலையில் ரா பத்து மண்டபத்தில் ரா பத்து உற்சவத்தின் முதல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News