ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி: அழகர்கோவிலில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய பெருமாள்

Published On 2017-01-09 13:14 IST   |   Update On 2017-01-09 13:14:00 IST
அழகர்கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி சுந்தரராஜபெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாக்களில் மார்கழி மாதம் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழா கடந்த மாதம் 29-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சாமி புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 6.25 மணிக்கு நடந்தது.

இதில் நம்மாழ்வார் முன்னே செல்ல, மேளதாளம் முழங்க கள்ளழகர் என்ற சுந்தரராஜபெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்தார். அப்போது கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்குள்ள சயன மண்டபத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நிகழ்ச்சியில் மதுரை உள்பட வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு முதல் கோவில் வளாகத்தில் வந்து குவிந்தனர்.

இந்த வருட விழாவிற்கு வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மூலவர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரராஜபெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

18ம்படி கருப்பணசாமி கோவிலிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும் இதைபோலவே அதிகாலை 6.25 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

பசுமலையில் உள்ள சக்திமாரியம்மன் கோவிலில் உள்ள வெங்கடாஜலபதி சன்னதியில் வைகுண்ட ஏகதாசி விழா நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருமங்கலத்தை அடுத்த சிந்துபட்டியில் வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. அங்கு நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலையில் பெருமாள் பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் வழியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல திருமங்கலம் கணபதிநகரில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலிலும் நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனக நாராயணப் பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜெனக நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சொர்க்கவாசல் வழியாக வந்தார். அவரை ஆழ்வார்கள் ராமானுஜர், வேதாந்ததேசிகர், நம்மாழ்வார் ஆகியோர் பாசுரங்கள் பாடி வரவேற்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் லதா, கணக்கர் பூபதி, ரகுராம்பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல சோழவந்தான் அருகே குருவித்துறையில் பிரசித்தி பெற்ற குருஸ்தலமான சித்திரரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 5.35 மணிக்கு நடைபெற்றது. அப்போது வல்லப பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சொர்க்கவாசல் வழியாக வந்தார்.

அப்போது நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், நாலாயிர திவ்வியபிரபந்த பாசுரங்கள் பாடி, கோவில் வளாகத்திற்குள் வலம் வந்தனர். கடந்த தீபாவளி திருநாள் முதல் மூலவர் சித்திரரத வல்லப பெருமாள் எண்ணெய் காப்புடன் காட்சியளித்து வந்தார். அதைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நாளான நேற்று எண்ணெய் காப்பு களையப்பட்டு வஸ்திரங்கள் அணிந்து, வண்ண மலர்கள் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், ரங்கநாதபட்டர், கோவில் பணியாளர்கள் கிருஷ்ணன், நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இதையொட்டி அதிகாலையிலிருந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Similar News