ஆன்மிகம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் பிரகார புறப்பாடு நடைபெற்ற போது எடுத்த படம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

Published On 2017-01-09 13:11 IST   |   Update On 2017-01-09 13:11:00 IST
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சைமாவட்டம் கும்பகோணத்தில் வரலாற்று சிறப்புடைய சாரங்கபாணி கோவில் உள்ளது. 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருப்பதி தலத்திற்கு அடுத்து மூன்றாவது தலமாக இந்த கோவில் திகழ்கிறது. பெருமாள் வைகுண்டத்தில் இருந்து அவர் எழுந்தருளியுள்ள ரதத்துடனேயே இங்கு வந்து தங்கிவிட்டார். இதற்கு ஆதாரமாக கர்ப்பக்கிரகம் யானை, குதிரைகளுடன் கூடிய உருவத்தில் அமைந்திருக்கிறது. இதனாலேயே இத்திருத்தலம் நித்ய வைகுண்டம், பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. இந்த கோவிலே வைகுண்டமாக கருதப்படுவதால் இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது.

இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற பூலோக வைகுண்டமாக திகழும் சாரங்கபாணி கோவிலில் நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன் விழா தொடங்கியது. ஆராவமுதன் முத்தங்கி சேவையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கத்திலிருந்து மலர் மாலைகள் வரவழைக்கப்பட்டு பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டன.

கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சேவார்த்தி மண்டபத்தில் பக்தர்கள் அர்ச்சனை செய்ய வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. பாதுகாப்பு ஏற்பாடுகளை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர். ராஜகோபுரம் முதல் மூலஸ்தானம் வரை அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி, தக்கார் மதியழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாரங்க பாணி கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது.

Similar News