ஆன்மிகம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை

Published On 2016-05-07 09:33 IST   |   Update On 2016-05-07 09:33:00 IST
அமாவாசையையொட்டி நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை தரிசனம் செய்தனர்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். மாரியம்மனை தரிசிப்பதற்காக பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, பஞ்சப்பிரகார திருவிழா காலங்களிலும், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களிலும், ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஏராளமான பக்தர்கள் மாரியம்மனை தரிசிப்பதற்காக வருவார்கள்.

அதன்படி அமாவாசையான நேற்று ஏராளமான பக்தர்கள் அக்னி நட்சத்திர வெயிலையும் பொருட்படுத்தாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் மொட்டையடித்தும், மாவிளக்கு போட்டும் தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியோடு அம்மனை வழிபட்டனர்.

பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறையின் சார்பாக திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சமயபுரம் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News