ஆன்மிகம்

கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் சூரியபூஜை

Published On 2016-04-25 09:11 IST   |   Update On 2016-04-25 09:10:00 IST
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் சூரியபூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகாமக திருவிழா தொடர்புடைய 12 சிவன் கோவில்களில் ஒன்றாகவும், நாகதோஷ பரிகார தலமாகவும் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில் திகழ்கிறது. மகாபிரளய காலத்தில் அமிர்தகுடம் உடைந்து சிதறியபோது இத்தலத்தில் வில்வம் சிதறி விழுந்ததால் இங்கு இறைவன் வில்வனேசராக எழுந்தருளினார்.

உலக பாரத்தை தாங்க சக்தியற்ற நாகராஜன், வில்வனேசரை பூஜை செய்து அருள்பெற்றதால் நாகராஜன் வேண்டுகோளுக்கிணங்க நாகேஸ¢வரர் என்ற பெயருடன் இக்கோவில் விளங்குவதுடன், நாகதோஷ பரிகார தலமாகவும் போற்றப்படுகிறது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், உலகிற்கு ஒளிதரும் சூரிய பகவான் நாகேஸ்வரரை வழிபடுவதாக ஐதீகம். அதன்படி ஆண்டுதோறும் சித்திரை மாதம் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சூரியபூஜை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு நேற்று காலை சூரியோதய நேரத்தில் நாகேஸ்வரரான சிவலிங்கத்தின் மீது சூரியஒளி பட்டது. இதையொட்டி சுவாமி, அம்மன், இந்த கோவிலில் தனி சன்னதியில் உள்ள சூரியபகவான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News