ஆன்மிகம்

வரசித்தி விநாயகர் கோவிலில் சதய நட்சத்திர விழா

Published On 2016-04-25 09:00 IST   |   Update On 2016-04-25 09:00:00 IST
நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சதய நட்சத்திர விழா தொடங்கியது. இதையொட்டி திருநாவுக்கரசருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
63 நாயன்மார்களில் ஒருவர் திருநாவுக்கரசர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூரில் பிறந்த இவர் பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்து, தேவார பதிகங்களை பாடி சைவபணியில் ஈடுபட்டார்.

மேலும், பல கோவில்களை தூய்மைப்படுத்தியதால் இவர் உழவாரத் தொண்டர் எனவும், திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டவர். இப்படி, சமய தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81-வது வயதில் திருப்புகலூரில் சித்திரை சதய நட்சத்திரத்தன்று மோட்சம் அடைந்தார்.

இதையடுத்து, அவர் மோட்சம் அடைந்த நாளில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி, நெல்லிக்குப்பத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலிலும் 10 நாட்கள் சதய நட்சத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு சதய நட்சத்திர விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி, கோவிலில் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருநாவுக்கரசருக்கு காலை, மாலை இருவேளைகளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இதில் வருகிற 29-ந் தேதி தண்ணீர் பந்தல் உற்சவமும், 30-ந் தேதி கட்டஅமுது உற்சவமும் நடைபெறுகிறது. பின்னர் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக சித்திரை சதய நட்சத்திர நாளான 1-ந் தேதி திருநாவுக்கரசருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்று மாலை மகா அபிஷேக, ஆராதனைகளும், இரவு 8 மணிக்கு திருநாவுக்கரசர் வீதியுலாவும் நடைபெறுகிறது.

Similar News