ஆன்மிகம்

குகநாதீஸ்வரர்-பார்வதிஅம்பாள் திருக்கல்யாண விழா 27-ந் தேதி நடக்கிறது

Published On 2016-04-25 09:00 IST   |   Update On 2016-04-25 09:00:00 IST
கன்னியாகுமரியில் குகநாதீஸ்வரர்-பார்வதிஅம்பாள் திருக்கல்யாண விழா 27-ந் தேதி நடக்கிறது.
கன்னியாகுமரி ரெயில் நிலையம் சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலின் வருஷாபிஷேக விழா மற்றும் குகநாதீஸ்வரர்-பார்வதிஅம்பாள் திருக்கல்யாண விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. அன்று காலை கணபதி ஹோமமும், அம்பாளுக்கு அபிஷேகமும், வருஷாபிஷேகமும் நடக்கிறது.

பகல் அலங்கார தீபாராதனை, அன்னதானமும், மாலை ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பெண் அழைப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து பெருமாள்சாமி, திருக்கல்யாணத்தை நடத்தி வைக்க கன்னியாகுமரி நடுத்தெருவில் உள்ள பாலகிருஷ்ணசாமி கோவிலில் இருந்து எழுந்தருளி குகநாதீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி நடக்கிறது. இதில் குகநாதீஸ்வரர், பார்வதி அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிப்பதும், அதன்பிறகு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும், மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் முருகனும், சப்பர வாகனத்தில் பெருமாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம்வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு பள்ளியறை பூஜை வைபவமும், அதைத்தொடர்ந்து திருக்கல்யாண விருந்தும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

Similar News