கோவில்கள்

சைவமும், வைணவமும் சங்கமிக்கும் சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோவில்

Published On 2023-06-01 06:31 GMT   |   Update On 2023-06-01 06:31 GMT
  • இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
  • சுமார் 16 ஏக்கர் பரப்பில் இக்கோவில் அமைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது. பண்டைய சோழ பாண்டிய நாடுகளின் எல்லை நகரமாக விளங்கிய சிங்கம்புணரியில் அமைந்துள்ள இக்கோவிலில் சைவமும், வைணவமும் சங்கமிக்கும் சிறப்பு பெற்றதாகவும் உள்ளது. இப்பகுதியில் நடந்த சோழ, பாண்டிய போருக்கு பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில் மன்னர் கூன்பாண்டியன் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. சுமார் 16 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் சிங்கம்பிடாரி அம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், தான் தோன்றீசுவரர், அடைக்கலம் காத்த அய்யனார், கன்னி மூல கணபதி, முருகர், நவக்கிரகங்களுக்கு தனி கருவறைகளும், தனி விமானங்களும் அமைந்துள்ளது.

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இங்குள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் நடைபெறும் வைகாசி திருவிழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் சிறப்பாக நடைபெறும். விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 5-வது நாள் திருவிழாவில் நடக்கும் திருக்கல்யாண உற்சவமும், 6-வது நாள் திருவிழாவின் போது நடைபெறும் கழுவன் திருவிழாவும், 9-ம் நாள் நடைபெறும் தேர்த்திருவிழாவும், 10-ம் நாள் நடைபெறும் பூப்பல்லக்கு உற்சவமும் இக்கோவிலுக்கு மட்டுமல்ல சிங்கம்புணரி நகருக்கும் பெருமை சேர்க்கும் விழாவாக நடைபெற்று வருகிறது.

அதிலும் தேர்த்திருவிழா அன்று சுற்று வட்டார 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து ஒற்றுமையுடன் கலந்துகொண்டு வடம் பிடிக்கும் அழகே தனிதான். குறிப்பாக தேர் நிலையை வந்தடைந்ததும் லட்சக்கணக்கான தேங்காய்களை தேரடி படிக்கட்டுகளில் பக்தர்கள் வீசி எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் இக்கோவிலில் நடைபெறும் மற்றொரு மணிமகுட விழாவாக இருந்து வருகிறது. இப்பகுதி மக்கள் இக்கோவில் திருவிழா நாட்களில் தங்கள் வீட்டு விசேஷங்கள் எதுவும் நடத்த மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய முடிவுகள் எடுக்கும் சந்தி வீரன் கூடம்

இங்குள்ள மும்மூர்த்திக்கு சேவுகப்பெருமாள், சேவுகமூர்த்தி, சேவுகராயன், சேவுகராசன், சேவுகன், சேதுபதி என பல்வேறு திருநாமங்களில் போற்றப்பட்டு வருகிறார். அரிஹர புத்திரராக விளங்கும் இந்த சேவுகமூர்த்தியின் பெயரில் வைணவ திருநாமமான பெருமாள் என்னும் பெயர் கொண்ட போதிலும் சைவ கடவுளாகவே போற்றப்பட்டு வருகிறார்.

கோவிலுக்கு பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக நேர்ந்து விடுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் காணிக்கையாக நேர்ந்து விடப்பட்டு அந்த மாடுகள் இந்த பகுதியில் உள்ள வீதிகளில் சுற்றி வரும்போது அந்த மாட்டிற்கு பழம், உணவுகளை அப்பகுதி மக்கள் பாசத்துடன் கொடுப்பது வழக்கம். சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏதும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தால் இந்த கோவில் காளைகளுக்குதான் முதல் மரியாதை செலுத்தப்படுவது இன்று வரை வழக்கத்தில் இருந்து வருகிறது.

இவ்வாறு நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் மாடுகள் கோசாலை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சிங்கம்புணரியில் உள்ள சந்திவீரன் கூடத்தில் சேவுகபெருமாள் அய்யனார் உருவமற்ற சொரூபமாக உள்ளார். இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடத்தும் பொருட்டு மக்களிடம் காணிக்கை பெற கிராமத்திற்கு வரும் உற்சவ விநாயகர் இங்குள்ள சந்திவீரன் கூடத்தில் 10 நாட்கள் தங்கியிருப்பார்.

அந்த 10 நாட்களும் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய்வேத்தியம் கொண்டு விநாயகருக்கு படையல் படைக்கப்படும். பின்னர் 10 நாட்களுக்கு பின்னர் கோவிலுக்கு விநாயகர் திரும்பியவுடன் திருவிழா முறைப்படி தொடங்கும். இந்த கூடத்தில் விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் 10 நாட்களும் அவருடன் சேவுகபெருமாளும் தங்கியிருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.

மற்ற நாட்களில் இந்த கூடத்திற்கு வரும் பக்தர்கள் சேவுகமூர்த்தியை மட்டும் வணங்குவார்கள். சந்திவீரன் கூடத்தில் கிராமத்தினர் ஒன்றாக கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும் இடமாகவும் உள்ளது. இங்கு உருவமற்ற சொருபமாய் விளங்கும் சேவுகபெருமாள் முன்னிலையில்தான் வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படும். அப்போதுதான் பொய் சொல்லமாட்டார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் பக்தர்களின் பங்களிப்புடன் தற்போது தங்க கோவிலாக மாறி உள்ளது. இக்கோவிலில் உள்ள சேவுகப்பெருமாளை குலதெய்வமாக வணங்கும் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் பக்தர்களின் சார்பில் கோவில் திருப்பணிக்காக வழங்கிய நன்கொடைகள் மூலம் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது.

தங்கமாக ஜொலிக்கும் கோவில்

இக்கோவிலில் வெள்ளி தேர் செய்ய பக்தர்கள் முடிவு செய்து அதற்கான வெள்ளியை உபயமாக வழங்கி வெள்ளி தேர் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கும் வெள்ளி தகடும் பதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டகபடிதாரர்கள் சார்பில் கோவிலில் உள்ள அனைத்து உற்சவ வாகனங்களுக்கும் வெள்ளி தகடு பதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பணிக்குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராம.அருணகிரியின் முயற்சியின் காரணமாக கோவிலில் உள்ள 5 மூலஸ்தான விமானங்களுக்கும் தங்கத்தகடும், கோவில் கொடிமரத்திற்கு தங்க தகடும் பதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அடைக்கலம் காத்த அய்யனார் விமானம், ராஜகோபுர கலசங்கள் ஆகியவற்றிக்கும் தங்க தகடுகள் பதிக்கப்பட்டு தங்க கோவிலாக காட்சியளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. கோவில் முன்பு உள்ள புரவிகள் சீரமைக்கப்பட்டு புராண, இதிகாச ஓவியங்கள், சிற்பங்கள் மீண்டும் சீர் செய்யப்பட்டுள்ளது. மூலஸ்தானம், அடைக்கலம் காத்த அய்யனார், பூவை வல்லி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர், பிடாரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் நவக்கிரக விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருக்கல்யாண மண்டபத்தில் வர்ணம் பூச்சுகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்கனவே இதற்கு முன்பு கடந்த 1973 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

22 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் இக்கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு 33 குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. யாகசாலை பூஜையின் போது தினமும் அன்னதானமும் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர், கிராமத்தினர் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News