கோவில்கள்

தீவினைகளை வேரறுக்கும் சேத்திரபாலபுரம் காலபைரவர் திருக்கோவில்

Published On 2023-07-28 07:51 GMT   |   Update On 2023-07-28 07:51 GMT
  • இந்த தலத்தில் பைரவருக்கு நாய் வாகனம் கிடையாது.
  • இங்கு உள்ள காலபைரவர் 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் அதிபதி ஆவார்.

மனித வாழ்வில் அன்றாடம் நாம் அனுபவிக்கும் இ்ன்ப, துன்பங்களுக்கு முற்பிறவியில் நாம் செய்த பாவ, புண்ணியங்களே முக்கிய காரணமாக அமைகிறது.

இப்பிறவியில் நாம் யாருக்கும் எந்த பாவமும் செய்யாது இருந்தாலும் நம் வாழ்வை சூழ்ந்துள்ள துன்பம் நம்மை விட்டு விலகாமல் இருக்கிறது. இதற்கு நாம் பிதுர்கடன், பரிகார பூஜை, விரதமுறை, குலதெய்வ வழிபாடு போன்றவற்றை மறந்ததே காரணம் ஆகும். குறிப்பாக பைரவர் வழிபாடு மனிதர்களை தீவினைகளில் இருந்து காத்து அவர்களுக்கு நல்வாழ்வை அளிக்கும்.

காலபைரவர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கால பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. பைரவருக்கென தனி கோவில் சேத்திரபாலபுரத்தில் மட்டுமே உள்ளது. மேலும் இங்கு உள்ள பைரவர் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருந்து பல தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தும் தோஷம் நீங்கவில்லை. இறுதியாக காவிரி தென்பகுதியில் உள்ள திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபட்டவுடன் கால பைரவருக்கு பிரம்மஹத்தி சாபம் நீங்கியது.

அப்போது விநாயக பெருமான், பைரவருடைய சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசுமாறு கூறினார். இதனால் பைரவர் தனது சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீச அந்த சூலாயுதம் சேத்திரபாலபுரம் இந்திர தீர்த்தத்தில் விழுந்தது.

சுவேத விநாயகர்

சூலம் தூக்கி வீசப்பட்ட பிறகு இந்த ஊரில் தான் சூலாயுதம் கிடக்கும் என்று விநாயகர் கால பைரவரை அழைத்து வருகிறார். பிறகு சேத்திர பாலபுரத்தில் உள்ள கணபதி தீர்த்தம் மற்றும் இந்திர தீர்த்தத்தில் நீராடிய பிறகு சூலம் கிடைக்கிறது. அதன் பின் சூலாயுதத்தை எடுத்துக்கொண்டு அதே சுவேத விநாயகரை தரிசனம் செய்ய பைரவர் சென்றபோது பைரவரிடம், விநாயகர் தற்போது கோவில் உள்ள இடத்தில் சேத்திர பாலகராக தங்கி சூலக்கட்டு வியாதிகளை நிவர்த்தி செய்து பக்தர்களை காக்க கட்டளையிட்டார்.

தாமரையில் பைரவா்

சேத்திரபாலகராக பைரவர் இங்கு தங்கியதால் இந்த ஊர் சேத்திரபாலபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் பைரவருக்கு நாய் வாகனம் கிடையாது. தாமரை மலரில் பைரவர் வீற்றிருக்கும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கு உள்ள காலபைரவர் 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் அதிபதி ஆவார்.

இந்த கோவிலில் நடைபெறும் வழிபாடு வேறு எங்கும் இல்லாத வகையில் தனி சிறப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் தேங்காய் மூடியில் நெய் தீபம் இட்டு வழிபட்டால் குடும்ப நலன், காரிய வெற்றி கிடைக்கும். குறிப்பாக திருமணத்தடை அகலும் என்பது ஐதீகம்.

முந்திரி பருப்பு மாலை

சனி திசை, சனி மகா திசை, ஏழரைச்சனி, அஷ்டம சனி போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட தேங்காய் மூடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளுக்கு பாகற்காயை வெட்டி அதில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வாஸ்து தோஷம், கோ சாபம், பிதுர் சாபம், மாது சாபம், பண நஷ்டம், பெற்றோர் சாபம் போன்றவை நீங்க பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட வேண்டும், உடல் நலக்குறைவு நீங்கி, அந்நிய தேசப்பயணம் சென்று பொருள் ஈட்ட கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

புத்திர தோஷம்

அரசியலில் பெயர் புகழ் சேர பைரவருக்கு கிராம்பு மாலை அணிவிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி வளா்ச்சிக்கு பைரவருக்கு ஏலக்காய் மாலை அணிக்க வேண்டும். சித்த பிரம்மையால் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்தவர்கள் புத்திக்கூர்மை பெற்று தெளிந்த மனநிலை பெற செவ்வாழை பழத்தில் நெய் தீபமிட்டு வழிபட வேண்டும். புத்திர பாக்கியம் பெற 54 முழு முந்திரிக்கொட்டையை எடுத்து அதனை மாலையாக தயார் செய்து பைரவருக்கு சாற்றி தயிர் அபிஷேகம் செய்து வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு...

மேலும் இங்கு தேய்பிறை அஷ்டமி திதியில் எண்ணெய்யை மந்திரித்து தடவ மூட்டு வலி, கால் வலி, சூலக்கட்டு வியாதிகள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பைரவா் வீசிய சூலாயுதம் இங்கு கிடைத்ததால் பைரவர் ஆனந்தம் அடைந்தார். இதனால் இந்த தலத்து பைரவர் ஆனந்த கால பைரவர் என அழைக்கப்படுகிறார். இங்கு அர்ஜுனனுக்கு பாசுபதம்(கோடாலி உருவ ஆயுதம்) கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

அஷ்டமியில் கால பைரவரை வழிபட்டால் தீவினைகள் நீங்கும். . தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமியில் கால பைரவரை 11 முறை சுற்றி வலம் வந்து வழிபட்டால் தனிச்சிறப்பு. இந்த கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் என்றும் முன்பு கிராம கோவிலாக இருந்த இந்த ஸ்தலம் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அபிஷேகம்

சேத்திரபாலபுரம் கால பைரவர் கோவிலில் வளர்பிறை, தேய்பிறை அஷ்டமியை தவிர்த்து தினமும் ஒரு கால பூஜை நடந்து வருகிறது. இந்த கோவிலில் வருடத்திற்கு சித்ரா பவுர்ணமி கார்த்திகை கடை ஞாயிறு உள்ளிட்ட நேரங்களில் பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு வருடத்திற்கு 2 முறை விழா கொண்டாடப்படுகிறது.

இங்கு பைரவருக்கு சந்தனாதி தைலம், அரிசி மாவு, மஞ்சள்தூள், திரவிய பொடி, நெல்லி பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், இளநீர், தயிர், எலுமிச்சை, நார்த்தங்காய், கரும்புச்சாறு, புனுகு, ஜவ்வாது, சந்தனம், பன்னீர், விபூதி, பால் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கோவிலில் பரிகார தீபங்கள் ஏற்ற பெரிய அளவில் தனி இடம் உள்ளது.இந்த கோவிலில் தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தீபம் ஏற்றி மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள்.

கோவிலுக்கு செல்வது எப்படி?

சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் மயிலாடுதுறைக்கு வர வேண்டும். பின்னர் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 8 கி.மீ். பயணித்து இந்த கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்புபவர்கள் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலுக்கு செல்லலாம்.

Tags:    

Similar News