கோவில்கள்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்- புதுக்கோட்டை

Published On 2022-06-14 04:00 GMT   |   Update On 2022-06-14 04:00 GMT
  • அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
  • குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் அமைந்துள்ள, முத்துமாரியம்மன் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மூலவர்: முத்துமாரியம்மன்

உற்சவர்: பூவாடைக்காரி

தல விருட்சம்: வேம்பு

தீர்த்தம்: ஆகாச ஊரணி, தளுப்புசுனை, பழுதுபடாசுனை.

* ஈரேழு உலகங்களுக்கும் பயணிக்கும் வல்லமை பெற்றவர் நாரத முனிவர். இவர் இத்தலம் வந்து தங்கியதால் இது 'நாரதர் மலை' என்று வழங்கப்பட்டு, நாளடைவில் 'நார்த்தாமலை' என்றானது.

* மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உலக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை ஆகிய ஒன்பது மலைக்குன்றுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது, நார்த்தாமலை.

* ராமாயண காலத்தில் நடந்த ராம- ராவணப் போரின் போது, மேகநாதனின் அம்பு பட்டு மூர்ச்சையான லட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்றார். அதில் இருந்து விழுந்த சிறிய துண்டுதான் இந்த நார்த்தாமலை என்கிறது தல வரலாறு.

* திருவண்ணாமலையில் வாழ்ந்த ஜமீன்தார் வம்சத்தைச் சேர்ந்த மலையம்மாள் என்பவர் தன்னுடைய சொந்த முயற்சியால் இந்த ஆலயத்தை விரிவுபடுத்தி மண்டபங்கள் எழுப்பினார்.

* இத்தல அம்மன் சிலை, நார்த்தாமலையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கீழக்குறிச்சி என்ற கிராமத்தில் ஒரு வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்டது.

* முத்துமாரியம்மன் சன்னிதியின் வடபுற சுவரில், கல்லால் ஆன முருகன் எந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் மிகவும் விசேஷத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

* அம்மை நோய் கண்டவர்கள், இத்தலம் வந்து வழிபட்டால், அந்த நோய் குணமாவதால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். குழந்தை பாக்கியத்திற்கும் இந்த ஆலயம் புகழ்பெற்று விளங்குகிறது.

* குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து கரும்பு தொட்டில் செய்து ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்னி கரகம் எடுத்தால், தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

* புதுக்கோட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில்.

Tags:    

Similar News