கோவில்கள்

மங்களகிரி பானக நரசிம்மர் கோவில்

Published On 2022-11-23 06:56 GMT   |   Update On 2022-11-23 06:56 GMT
  • இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது.
  • இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது.

மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். மங்கள+கிரி=மங்களகிரி. இந்தியாவில் உள்ள பல பெருந்தலங்களில் இதுவும் ஓன்று. ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்வதால் இந்த மலை மங்களகரமான மலை எனப் பெயர் பெற்றது. மங்களகிரியில் மொத்தம் மூன்று நரசிம்ம சுவாமி கோயில்கள் உள்ளன. ஒன்று, மலையில் அமைந்துள்ள பானக நரசிம்மர் சுவாமி கோயில். இரண்டு, மலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். மூன்றாவது, மலை உச்சியில் உள்ள கண்டல நரசிம்ம சுவாமி ஆகும். இந்த மலை யானை வடிவில் அமைந்துள்ளது. எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இம்மலை யானை வடிவிலேயே காண்பது இதன் தனிச் சிறப்பாகும்.

இம்மலை உருவான கதை மிகவும் சுவாரசியமானது. பழங்காலத்தில் பாரியாத்ரா என்ற ஒரு அரசன் இருந்தான். அவனது மகன் ஹரஸ்வ ஸ்ருங்கி பல புனித இடங்களுக்கும் சென்று தவம் புரிந்து கடைசியில் புனிதத் தலமான மங்களகிரியை வந்தடைந்தான். அங்கு மூன்று ஆண்டு காலம் கடுமையான தவம் புரிந்தான். அப்பொழுது அனைத்து தேவர்களும் தோன்றி அவனிடம் அங்கேயே தொடர்ந்து தவம் புரியுமாறு கூறினர். அவனும்

ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தியானம் செய்தான். அப்பொழுது அவனது தந்தையான பாரியாத்ரா தன் மகனை தன்னோடு அழைத்துச் செல்ல வந்தான். ஆனால், ஹரஸ்வ ஸ்ருங்கியோ யானை வடிவம் பெற்ற மலையாக மாறி பகவான் ஸ்ரீமகா விஷ்ணுவின் இருப்பிடமாக உருவெடுத்தான். திருமால் நரசிம்ம வடிவில் அங்கு எழுந்தருளினார். அங்குள்ள மக்கள் அந்த இறைவனை பானக நரசிம்ம சுவாமி என்று அழைத்தனர்.

மகாவிஷ்ணு ஒரிசா மாநிலத்தின் பூரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதராக நின்று உணவருந்திவிட்டு, ஆந்திர மாநிலத்து சிம்மாசலத்தில் உடலை சந்தனக் குழம்பில் குளிர வைத்துக்கொண்டு, மங்களகிரியில் பானகம் அருந்தி, திருப்பதியில் ஆட்சி செய்துகொண்டு, ஸ்ரீரங்கத்தில் சயனித்திருந்து ஜகத்கல்யாண மூர்த்தியாகத் திகழ்வதாகப் புராணங்கள் கூறுகிறது.

திருமால் இரண்யனை வதம் செய்து தன் பக்தன் பிரகலாதனைக் காக்க தூணில் தோன்றிய கணநேர அவதாரம் நரசிம்ம அவதாரம். சிம்ம முக நரசிம்மர் அருட்பாலிக்கும் கோயில்கள் பல உண்டு. அவற்றில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிலிருந்து குண்டூர் செல்லும் சாலையில் 26 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மங்களகிரி என்ற புனிதத் தலத்திலுள்ள மலைக் குகைக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது. சங்கு சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, வாய் திறந்த முகம் மட்டும், தானாகத் தோன்றிய ஸ்வம்வ்யக்த அதாவது தானே தோன்றிய மூர்த்தமாக அமைந்து, பக்தர்கள் நிவேதனம் செய்யும் பானகத்தில் பாதியை மட்டும் அருந்தி அருட்பாலிக்கும் பானக நரசிம்மர் கோயில் அது.

பாரதத்திலுள்ள மலைகளில் மஹேந்திரம், மலையம், ஸஹ்யம், சுக்திமான், ருக்‌ஷம், விந்தியம், பாரியாத்ரம் என்பவை ஸ்பதகுல பர்வதங்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது. ஸர்வ சுகஸ்வ ரூபிணியான மகாலட்சுமி அமிர்தத்தை மகாவிஷ்ணுவுக்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக, பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது. ஹஸ்திகிரி, தர்மாத்ரி, கோத்தாத்ரி, முக்தியாத்ரி என்பவை அதன் ஏனைய பெயர்கள் என புராணங்கள் கூறுகின்றன. வேதபுராணத்தில் இத்தலத்திற்கு சபலதா என்ற பெயரும் உள்ளதாக சொல்லியிருக்கிறது.

இந்த மலைப் பிராந்தியத்தில் மேய்ந்து வந்த பசு ஒன்று தினமும் மாலையில் பாலின்றி திரும்புவதைக் கண்ட பசுவின் சொந்தக்காரன் அதைக் கண்காணித்தபோது, ஒருநாள் மாலை வேளையில் நிழல் உருவம் ஒன்று பசுவின் பாலை அருந்திவிட்டு குகையொன்றில் சென்று மறைவதைக் கண்டான். அன்றைய இரவு அவனது கனவில் மகாலட்சுமி சமேதராய் நரசிம்மர் தோன்றி, மொமூச்சி என்ற கொடிய அரக்கனுக்காகத் தாம் அந்தக் குகையினுள் மறைந்திருப்பதாகக் கூறினார்.

மறுநாள் பசுவின் சொந்தக்காரன் அந்தக் குகை துவாரத்தில் தனது பசுவின் பாலை ஊற்ற, அதில் பாதி பிரசாதமாக வெளியே வழிந்ததை அவன் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான். இந்தச் சம்பவத்தை அவன் அந்தப் பிராந்தியத்தை ஆண்டு வந்த திரிலோக விஜயன் என்ற அரசனிடம் கூற, அரசன் நரசிம்மருக்கு குகை மீது கோயில் கட்டியதாக பானக நரசிம்ம தலத்தின் புராணம் கூறுகிறது.

கொடிய அரக்கனான மொமூச்சி கொட்டைப் பாக்கில் பொருந்திய ஊசி முனைமீது ஒற்றைக்கால் கட்டை விரலில் சூரியனை நோக்கி நின்று கொண்டு கைகூப்பி பிரம்மனைக் குறித்து தவம் செய்தபொழுது, அந்த தவவலிமையில் ஈரேழு புவனங்களும் ஆடின. இதையடுத்து அன்ன வாகனத்தின் மீது அமர்ந்து நொமூச்சிக்கு காட்சி தந்த பிரம்மன், எந்த மானிடனாலோ அல்லது ஆயுதத்தினாலோ தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தருளினார்.

இதைத் தொடர்ந்து தேவர்களைத் துன்புறுத்தி வந்த நொமூச்சியிடமிருந்து தம்மைக் காக்கத் தேவர்கள் திருமாலிடம் முறையிட, திருமாலும், நரசிம்மராக மங்களகிரி குகைக்குள் தங்கியிருந்தது, மொமூச்சியை எதிர்நோக்கி நின்றார். அச்சமயம் இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை நரசிம்மர் தனது நகங்களில் ஏற்றுக்கொண்டு குகையருகில் மொமூச்சியை சம்ஹாரம் செய்தருளினார் என ஈசன் உமையவளுக்குக் கூறியதாக, பிரம்ம வைவர்த்த புராணத்தின் பவானி சங்கர கீதை கூறுகிறது. இதன் காரணமாகவோ என்னவோ, இத்தல நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகின்றன.

தொடர்ந்து குகையில் தங்கிய நரசிம்மரது உக்ரம் தணியாமல் தகிக்க, பிரம்மன், நாரத மகரிஷி மற்றும் இந்திராதி தேவர்கள் அவரை தோத்திரங்களால் துதிக்க, நரசிம்மர், ஆகாய கங்கையில் நீராடி, தேவர்களை அமிர்தத்தை எடுத்து வரச்சொல்லி அருந்திவிட்டு, அதில் பாதி அமிர்தத்தைப் பிரம்மாதி தேவர்களுக்குப் பிரசாதமாக அளித்தார். அச்சமயம் அவரது உக்ரம் தணியத் தொடங்கியதாம்.

அவ்வாறு கிருதயுகத்தில் அமிர்தத்தை அருந்திய உக்ர நரசிம்மர் திரேதாயுகத்தில் பசு நெய்யையும், துவாபர யுகத்தில் பசுவின் பாலையும், நிகழும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி சாந்தமாக நின்று அருட்பாலிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு திருமால் பானக நரசிம்மராக வீற்றிருக்கும் குகைக்கோயில் மங்களகிரியிலுள்ள மலை மீது சுமார் 800 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அகன்ற நானூறு படிகளின் வழியாக சிரமமின்றி ஏறி, பானக நரசிம்மர் கோயில் சந்நதியை அடையலாம். மலையடிவாரத்தில் கோயில் கொண்டிருக்கும் பிரமராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும், தொடர்ந்து அருகில் கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் மலை ஏறத் தொடங்குகின்றனர். சுமார் 50 படிகள் ஏறியபின் மேற்கு நோக்கி நின்று அருள்புரியும் வேங்கடேஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்கிறோம்.

ஒரு சமயம் சர்வசுந்தரி என்ற அப்ஸரஸ் பெண் இட்ட சாபத்தினால் நாரத மகரிஷி பால் விருட்சமாக மாறி நின்றார். புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் அப்பால் விருட்சத்தைச் சுற்றி வந்து பழங்களை விநியோகம் செய்ய, அவர்களுக்குப் புத்திரகடாட்சம் ஏற்படும் என்ற நம்பிக்கை இங்குள்ள மக்களிடையே நிலவுகிறது. வேங்கடேஸ்வர ஸ்வாமி சந்நதியருகே வளர்ந்த பால் சொட்டு செடியை பிற்காலத்தில் மலையடிவாரத்திலுள்ள கருடாழ்வார் சந்நதியருகில் நட்டதாகக் கூறப்படுகிறது.

வேங்கடேஸ்வரரைத் தரிசித்து, தொடர்ந்து படி ஏறிச் சென்றால் துவஜஸ்தம்பம் அருகே நெய் தீபம் ஏற்றச் சொல்கிறார்கள். இந்த விளக்கில் முன்னூற்று அறுபத்தைந்து திரிகள் இருப்பதாகவும், ஒரு தீபம் ஏற்றினால் ஒர் ஆண்டு தீபம் ஏற்றிய பலன் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். தீபம் ஏற்றும் இடம் தூய்மையாக இருக்கிறது. இதே இடத்தில்தான் பானகச் சீட்டை விலை கொடுத்து வாங்க வேண்டும்.

அர்த்த மண்டபத்துடன் உள்ளே தீப ஒளி மட்டும் வீசும் இருள் சூழ்ந்த குகை சந்நதியை அடைகிறோம். இக்குகை கருவறைச் சுவரில் அமைந்த பெரிய பிறை ஒன்றில் மேற்கு திசை நோக்கி பானக நரசிம்மர், சங்கு - சக்கரத்தை இரு கைகளில் ஏந்தி, பல் வரிசைகள் வெளியே தெரியும். சிம்ம முகவாய் அகன்று திறந்த வண்ணம் முகத்துடன் மட்டும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாகக் காட்சி தருகிறார். இந்தப் பானக நரசிம்மருக்கு பிரத்யேக உருவம் கொண்ட விக்ரகம் எதுவும் கிடையாது.

ஆனால் 15 செ.மீ. அகலம் உடைய வாய்ப்பகுதி மட்டும் உண்டு. கடவுளின் இந்த வாய்ப்பகுதியானது வெங்கலத் தகட்டினால் சுற்றி மூடப்பட்டிருக்கும். இந்தக் கோயில் உச்சி காலம் வரையே திறந்து வைக்கப்படும். ஏனென்றால் இரவில் தேவதைகள் வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அங்குள்ள அந்த நரசிம்ம சுவாமியின் வாயில் பானகம் எனப்படும் வெல்லம் கரைத்த நீர் தீர்த்தமாக விடப்படும். அப்படி விடும் பொழுது இறைவன் அதை நிஜமாகவே பருகுவது போல் "மடக் மடக்" என பருகும் சத்தம் கேட்கும்.

சற்று நேரம் கழித்து அந்த சத்தம் நின்று விடும். அப்படி அந்த சத்தம் நின்றதும் மிச்சம் உள்ள பானகம் அப்படியே வாய்வழியாக வெளியேறிவிடும். இது ஒரு நாள், இரு நாள் நடைபெறும் அதிசயம் அல்ல. தினந்தோறும் எப்பொழுதெல்லாம் பக்தர்கள் நரசிம்மருக்கு பானகத்தை படைக்கின்றனரோ அப்பொழுதெல்லாம் இந்த அதிசயம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இப்படி இறைவன் வாயிலிருந்து வெளிவரும் பானகத்தை முக்கிய பிரசாதத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

கருவறைக்கு வெளியே மகாமண்டபத்தில் கோயில் சிப்பந்திகள் பானக நிவேதனம் செய்ய விரும்பும் பக்தர்கள் சார்பில் அவ்வப்போது பானகத்தைக் கரைத்து செம்பிலோ, சிறிய அல்லது பெரிய குடத்திலோ நிரப்பி சந்நதிக்கு எடுத்து வருகின்றனர். பானக அளவுக்குத் தக்கபடி இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சந்நதியிலுள்ள வைஷ்ணவ பட்டர் பெரிய வலம்புரி சங்கினால் திறந்த வாய்க்குள் ஊற்ற, இப்புனித பானகம் உள்ளே சென்று மறைந்து விடுகிறது. பானக பாத்திரத்தின் கொள்ளளவு எதுவாக இருந்தாலும், நிவேதனத்துக்கு எடுத்துச் செல்லும் பானகத்தில் பாதியளவு மட்டுமே வாய்க்குள் செல்கிறது.

தொடர்ந்து ஊற்றப்படும் பானகம் வெளியே வழிந்துவிட, அவ்வாறு மீறும் பானகத்தை அந்த பக்தருக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுகின்றனர். பானகமே பிரதான பிரசாதம். இதனால் இந்த கடவுளுக்கு பானக நரசிம்மர் என்று பெயர் வந்தது. அவ்வாறு புனித பானகம் தயார் செய்யும் இடத்தில் நீருடன் கலந்த வெல்லத் துண்டுகள் கீழே சிதறிக் கிடந்த போதிலும், அங்கு ஈக்கள் மொய்க்காதது இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்சமாகும்.

இந்தப் பானகத்தைத் தயாரிப்பதற்கு இம்மலைக் கோயிலின் கிழக்கேயுள்ள கல்யாணஸரஸ் என்ற சுனையிலுள்ள நீரே உபயோகிக்கப்படுகிறது. தேவர்கள் கட்டியதாகக் கருதப்படும் இச்சுனையில் சகல புண்ணிய தீர்த்தங்களும் கலந்துள்ளனவாம். மோட்சகாரகராக நின்றருள் புரியும் பானக நரசிம்மரைத் தரிசித்து பானக பிரசாதத்தை அருந்தி விட்டு, இக்கோயிலின் அருகேயுள்ள ஐம்பது படிக்கட்டுகளில் ஏறி தாயார் ராஜ்ய லட்சுமி சந்நதியை அடையலாம் வைரக்கண் மலர்களும் வைர பிறை சந்திரன் பொட்டும், நெற்றியில் துலங்க, மகாலட்சுமி ராஜ்யலட்சுமி என்ற திருப்பெயருடன் கைகளில் பத்மமும், வரத அபய முத்திரைகளுடனும் ஸ்வயம் வ்யக்த மூர்த்தமாக காட்சி தருகிறாள்.

அஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயினியான மகாலட்சுமி இங்கு ஞான பிரதாயினியாக விளங்குவதால், ராஜ்யலட்சுமியை ஆந்திர மக்கள் மாறு கொண்ட லெக்ஷ்மம்மா என்று பரிவுடன் அழைக்கின்றனர். ராஜ்யலட்சுமி சந்நதிக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் இத்தலத்தின் க்ஷேத்ரபாலராக விளங்கும் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் கல்லில் செதுக்கப்பட்டு வண்ணச் சிறப்புமாகக் காட்சி தருகிறார். ராமபிரான் ராவண யுத்தம் முடிந்து திரும்பும் வழியில் அனுமனை இத்தலத்தில் க்ஷேத்ரபாலராகத் தங்கி இருக்கும்படி அருளாசி கூறினாராம்.

ராஜ்யலட்சுமி சந்நதிக்குக் கிழக்கே ஒரு சிறு சந்நதியில் வல்லபாசார்யார் மூர்த்தத்துடன் தியான பீடம் அமைந்துள்ளது. ராஜ்யலட்சுமி சமேத நரசிம்மரைப் பூஜித்து வந்த வல்லபாசாரியார், இங்குள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து தியானித்து ஞானஒளி பெற்று ராஜஸ்தான், காஷ்மீர், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய வடமாநிலங்களில் இந்துமத தர்ம சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்து அருந்தொண்டு புரிந்தார். இதையடுத்து அத்தியான பீடம் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜ்யலட்சுமி சந்நதியின் மேற்குபுறமாக சிறு கோயிலில், அழகான சிறிய பள்ளிகொண்ட ரங்கநாதரது மூர்த்தம் சந்நதி கொண்டுள்ளார். இச்சந்நதியில் நித்யபூஜை நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இச்சந்நதிகளைத் தாண்டி, மலைமீது கண்டால்ராயன் கூண்டு என்ற குகை அறையில் தீபம் ஒன்று உள்ளது. இத்தீபத்தில், கன்றை ஈன்ற பசு அல்லது எருமை சுரக்கும் முதல் மாத பாலிலிருந்து எடுத்த நெய்யை ஊற்றி எரிய விடுபவர்களது கால்நடைக்கு பால் அதிகம் சுரக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது. இத்தீப ஒளியை ஏற்றி தரிசிப்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் கண்டங்களும், கஷ்டங்களும் தீரும் எனக் கருதப்படுகிறது.

குசிகுமாரன் என்ற பெண் பித்தன் தான் நெருங்கிய வேசிகள் நரசிம்மரிடம் அதிக பக்தி கொண்டிருந்தது தனக்கு இடையூறாக இருந்ததைக் கண்டு, கோபம் கொண்டு நரசிம்மரை நிந்தனை செய்தான். அன்றிரவு அவனது கனவில் நரசிம்மர் தோன்றி அவனுக்கு அருள் கூர்ந்ததையடுத்து, மறுநாள் தீபத்தை ஏற்றி ஞானஒளி பெற்றான் என்பது ஒரு கதை. மங்களகிரி மலையடிவாரத்தில் அமைந்த பெரிய கோயிலில் மகாவிஷ்ணு லட்சுமி நரசிம்மராக சந்நதி கொண்டுள்ளார்.

ராஜா வாஸிரெட்டி வேங்கடாத்ரி நாயுடு என்ற செல்வந்த பிரபு கட்டிய பதினொன்று அடுக்குகளைக் கொண்டு குறுகலாக, உயரமாக அமைந்த ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால், நான்கு சக்கரங்கள் பூட்டிய ரதம் போன்றமைந்த சிறிய சந்நதியில் கருடாழ்வாரைத் தரிசிக்கலாம். உள்ளே கருவறையில் நரசிம்ம ரூபமாக மகாவிஷ்ணு மகாலட்சுமியை மடித்த தன் இடது, தொடை மீது அமர்த்தி அணைத்துக்கொண்டு, இரு கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி வரத அபய முத்திரைகள் தாங்கிய வலது கரத்துடன், நூற்றெட்டு சாளக்கிராமங்களாலான மாலை அணிந்து, வலதுகாலைத் தொங்க விட்டு லட்சுமி நரசிம்மராகக் காட்சி தருகிறார்.

ஆதிசங்கரர் கயிலாயத்திலிருந்து கொண்டுவந்த மந்திர சாஸ்திர ஆதார நூல்களில் பிரபஞ்சஸாரம், மந்த்ர மஹார்ணவம், மந்திரமஹோததி ஆகியவை பிரசித்தி பெற்றவை. பிரபஞ்சஸாரத்தில் மகாவிஷ்ணு நரசிம்மருஷி என்றே குறிப்பிடப்பட்டுள்ளார். கூரநாராயண ஜீயர் இயற்றிய சுதர்சன சதகத்தில் நரசிம்மரது உருவ லட்சணங்களின் வர்ணனையில், ஜ்வாலாகேசமும் த்ரிநேத்ரமும் (முக்கண்கள்) பிரதான அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சுமி நரசிம்மரது மூன்றாவது கண் அவர் நெற்றியில் துலங்கும் சிவப்பு திருமண்ணின் கீழ் மறைந்திருப்பதாக ஐதீகம்.

லட்சுமி நரசிம்மர் மூர்த்தத்தின் அருகே வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆதிபுருஷரான வைகானஸ மகரிஷி மூர்த்தமாக அமர்ந்துள்ளார். தவிர லட்சுமி நரசிம்மர், நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோரது பஞ்ச லோக மூர்த்தங்கள் இச்சந்நதியிலுள்ளன. இக்கோயிலில் பெரிய தட்சிணாவர்த்த வலம்புரிசங்கு ஒன்று உள்ளது. முந்நாளைய திருவாங்கூர் சமஸ்தான மன்னர் வஞ்சிமார்த்தாண்ட வர்மா காணிக்கையாகக் கொடுத்த இச்சங்கில் ஓங்கார நாதம் கேட்பதாகக் கூறப்படுகிறது. விழாக்காலங்களில் இச்சங்கு உபயோகிக்கப்படுகிறது.

லட்சுமி நரசிம்மரின் கருவறைக்கு வெளியே மகாமண்டபத்திலுள்ள ஒரு சிறு அறையில் பன்னிரெண்டு ஆழ்வார்களின் சிலாமூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. சந்நதிக்கு வெளியே கோயில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்த அழகிய சிறு கோயிலில், வைரக் கண் மலர்களும், கரங்களில் பத்மம் ஏந்தி, வரத அபயக் கரங்களுடன் பத்மாஸன கோலத்தில் கம்பீரமாக வீற்றிருந்து ராஜ்யலட்சுமி அருட்பாலிக்கிறாள். இக்கோயிலில் விநாயகர், கோதண்டராமர், கோதண்டராமர், வாஸவி, கன்னிகா பரமேஸ்வரி, லட்சுமி சமேத ஸத்ய நாராயண சுவாமி ஆகியோரது சிறிய சந்நதிகளும் உள்ளன.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் இக்கோயிலில் லட்சுமி நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் செய்து பூஜித்ததாகக் கூறப்படுகிறது. தர்மரது கனவில் நரசிம்மர் தோன்றி தன்னைப் பிரதிஷ்டை செய்து ஆலய நிர்மாணம் செய்யும்படி அருளாசி கூறியதாகப் பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. கடந்த எட்டாவது நூற்றாண்டில் ஆதிசங்கரர் மங்களகிரிக்கு விஜயம் செய்தார். மண்டனமிச்ரரின் மனைவியும் கலைமகளின் அம்சமுமான அவரது மனைவி உபயபாரதி விடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒரு மாத அவகாசம் கேட்டு, காம சாஸ்திரத்து நுணுக்கங்களை அறிய, இறந்த அபமருகராஜன் என்ற மன்னனது பூத உடலில் பரகாய பிரவேசம் செய்தார் ஆதிசங்கரர்.

இதை அறிந்த அரசனது ஆட்கள், சீடர்கள் மறைத்து வைத்திருந்த ஆதிசங்கரரது பூத உடலைத் தேடிக் கண்டுபிடித்து நெருப்பு வைத்து விட்டனர். இது தெரிய வந்த ஆதிசங்கரர் அரசனது உடலினின்று நீங்கி தனது உடலில் பிரவேசித்தபொழுது, அவரது உடலின் கைப்பாகம் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தன் கைகளில் ஏற்பட்ட ரண உபாதையை நீக்கி தன்னைக் கைதூக்கி விடும்படி இத்தலத்தில் லட்சுமி நரசிம்மரைத் துதித்து, லட்சுமிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாடினார் என்று கூறப்படுகிறது.

கடந்த பதின்மூன்றாம் நூற்றாண்டில் சைதன்ய மகாப்பிரபுவும், பின்னர் ராமானுஜர், மத்வாசாரியார் ஆகிய பெரியோர்கள் மங்களகிரி நரசிம்மரைத் தரிசித்துச் சென்றுள்ளனர். போருக்குச் செல்லுமுன் நரசிம்மரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்ட விஜயநகர சக்ரவர்த்தி கிருஷ்ணதேவராயர் கடந்த பதினான்காம் நூற்றாண்டில் கொண்டபள்ளி பிராந்தியத்தை வென்றுவிட்டு, அதற்கு காணிக்கையாக நிலமும், பொன்னும் இக்கோயிலுக்கு அளித்தார்.

மங்களகிரி நரசிம்மர் கோயிலில் வைகானஸ சம்பிரதாயமே அனுஷ்டிக்கப்படுகிறது. பங்குனி மாத பௌர்ணமியன்று நரசிம்ம ஜெயந்தி உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. ஆவணி பௌர்ணமியில் வைகானஸ உற்சவமும், மாசி மாதம் பீஷ்ம ஏகாதசியையொட்டி பிரம்மோற்சவம், தெப்போற்சவம், நவராத்திரி, கார்த்திகை பௌர்ணமி ஆகிய நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

மங்களகிரி கல்யாணஸரஸ் சுனையில் நீராடுவதும், இத்தலத்தில் ஒருநாள் ஜபதபங்கள் செய்வதும் ஜீவன் முக்திக்கு வழிகோலும் என்றும், பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடும் என்றும் பவானி சங்கரகீதை கூறுகிறது. இதையொட்டி மங்களகிரி ஒரு மோட்ச தலமாக இருந்து, முக்திகிரி என்ற பெயரைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே உள்ள குண்டூரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் மங்களகிரி உள்ளது.

Tags:    

Similar News