கோவில்கள்

புத்திரபாக்கியம் அருளும் அவ்வையாரம்மன் கோவில்- கன்னியாகுமரி

Update: 2022-08-07 06:42 GMT
  • அவ்வையாரம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும்.
  • சுமார் 500 ஆண்டுகளுக்கும் பழமையான கோவில் இது.

தமிழ் கடவுள் முருகனின் திருவிளையாடல்கள் பற்றி கூறும்போது, அவர் தமிழ் மூதாட்டி அவ்வையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு உரையாடிய சம்பவம் தான் நம் அனைவரின் நினைவுக்கும் வரும். அதியமானுக்கு நெல்லிக்கனி வழங்கிய அவ்வையாருக்கு குமரி மாவட்டத்தில் பக்தர்கள் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அவ்வையாரம்மன் கோவிலில் நடைபெறும் ஆடி பூஜை வழிபாட்டுக்கும் தனி சிறப்பு உண்டு. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பூஜைகள் நடந்தாலும், ஆடி மாதம் நடை பெறும் பூஜைகள் தான் இங்கு விசேஷம். ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் இக்கோவிலில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

கோவிலுக்கு வரும் பெண்கள் கடும் விரதமிருந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற கோவில் வளாகத்தில் அமர்ந்து கொழுக்கட்டை தயாரிக்கிறார்கள். அந்த கொழுக் கட்டைகளை அவ்வையார் அம்மனுக்கு படைத்து வழிபடுகிறார்கள். சர்க்கரை, தேங்காய், ஏலம், சுக்கு, பச்சரிசி மாவு ஆகியவைகளை கலந்து இந்த கொழுக்கட்டைகளை தயாரிக்கிறார்கள்.

குறிப்பாக கூழ் கொழுக்கட்டை என்னும் தண்ணீரிலேயே போட்டு அவிக்கும் கொழுக்கட்டை வழிபாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. குழந்தை இல்லாத பெண்கள் அவ்வையாரம்மனுக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது பெண் பக்தர்களின் நம்பிக்கை.

சுடலை மாடன் கதைகளில் வரும் முக்கியமான கதாபாத்திரங்களில் வீரப்புலையன் கதாபாத்திரமும் ஒன்று. வீரப்புலையனுக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாத நிலையில் அவ்வையாரம்மனை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றதாக புராண கதை கூறுகிறது.

மேலும் பெண்கள் குடும்ப பிரச்சினைகள் தீரவும், கன்னிப் பெண்களுக்கு திருமண தடை நீங்கவும், நினைத்த காரியம் நிறைவேறவும் வேண்டி அம்மனை வழிபடுகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பிரசாதமாக கொழுக் கட்டையே வழங்கப்ப டுகிறது.

இந்த கோவில் ஆரல்வாய்மொழியை அடுத்த தாழக்குடி-பூதப்பாண்டி செல்லும் வழியில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகளுக்கும் பழமையான கோவில் இது. கோவில் முழுக்க, முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டது. கோவிலின் உள்ளே நுழைந்ததுமே சில்லென்று குளிர்ச்சியான சூழலை உணர முடிகிறது.

கோவிலில் அவ்வையார் அம்மன், அகஸ்தியர், முருகன், விநாயகர், சுடலைமாடன் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். கோவிலின் பழைய காலத்து பெயர் நெல்லிமடம் அவ்வையா ரம்மன் கோவில் என்பதாகும். தற்போது அந்த பெயர் கல்வெட்டுகளில் மட்டுமே காணப்படுகிறது. இது போக சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அவ்வையார் என்று பெயரிட்டு இன்றும் வாயார அழைத்து மகிழ்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

அவ்வையார் அம்மன் கோவில் நடை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.

ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் காலை 5 மணிக்கே நடை திறந்து இரவு 8 மணி வரை பூஜைகள் நடைபெறும். தினமும் காலை 11.30 மணிக்கும், மாலை 3 மணிக்கும் இருவேளையாக வெண்பொங்கல் நைவேத்திய பூஜை நடக்கிறது. விசேஷ நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. சித்திரை புத்தாண்டு அன்று கனிகாணல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழா நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேரடியாக பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர், சந்தைவிளை, தாழக்குடி, திருப்பதிசாரம் வழியாக நாகர்கோவில் செல்லும் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கோவில் வழியாக செல்லும்.

கோவில் தொடர்புக்கு - 9585460565.

Tags:    

Similar News