ஆன்மிகம்
கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவில்

108 அடி உயர சிவலிங்கம் அமைந்துள்ள கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவில்

Published On 2021-07-01 06:10 GMT   |   Update On 2021-07-01 06:10 GMT
கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, கோடி லிங்கேஸ்வரர் கோவில். கோவிலின் சிறப்பு அம்சமாக, மிக உயரமான 108 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக சிவன் கோவில்களில் மூலவர் சிவலிங்கம் தவிர்த்து ஆலயத்தைச் சுற்றிலும் ஒன்றிரண்டு சிவலிங்கங்கள் இருக்கக்கூடும். ஒரு சில ஆலயங்களில் மூலவர் லிங்கத்தைத் தவிர்த்து பஞ்ச லிங்க சன்னிதி என்ற வகையில் ஐந்து லிங்கங்கள் அமைந்திருக்கலாம். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் கோடிக்கும் அதிகமாக லிங்கங்கள் இருப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. ஆலயத்திற்குள் நுழைந்ததாலே எந்தப் பக்கம் திரும்பினாலும் சிவலிங்கங்கள்தான் காணப்படுகின்றன. ஆலயத்தின் பெயரே ‘கோடிலிங்கேஸ்வரர்’ கோவில் தான்.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது கோடிலிங்கேஸ்வரர் திருக்
கோவில்
. இங்கு உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்னும் வகையில், 108 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. இதைத் தவிர்த்து, கோவில் முழுவதும் பல்வேறு அளவுகளில் சிறியதும், பெரியதுமாக, ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமாக சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்கு தான் 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கிறது. இதன் காரணமாக ஆலயத்திற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆலயத்தில் சாம்பசிவமூர்த்தி என்பவரால் முதல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடும் மக்கள் அனைவரும், ஒவ்வொரு சிவலிங்கத்தை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கி விட்டனர். இவ்வாறு பல்கிப் பெருகியதன் காரணமாக இப்போது ஒரு கோடிக்கும் அதிகமான சிவலிங்கங்கள் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது. இப்போதும் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் அனைவரும் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துதான் இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் 108 அடி உயரத்தில் மிகப்பெரிய சிவலிங்கமும், அதற்கு நேர் எதிரில் 35 அடி உயரம் கொண்ட நந்தி சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவில் வளாகத்தில் பிரம்மதேவர், மகாவிஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, சீதாதேவி சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கருமாரியம்மன் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.

இதில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சன்னிதிக்குள் ‘சிவ பஞ்சயாதி’ என்னும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தைச் சுற்றிலும் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், பார்வதி மற்றும் நந்தி ஆகியோர் நின்று வணங்குவது போன்ற அமைப்பு உள்ளது.

கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் இரண்டு நாகலிங்க மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாதவர்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், மணமானவர்கள் மணவாழ்க்கை இடையூறு இன்றி இன்பமாக அமைய வேண்டியும் சிவபெருமானை வேண்டிக்கொண்டு, இந்த நாகலிங்க மரங்களில் மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் இருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இரண்டு வேளைகளில், 10 அர்ச்சகர்களால் மேளதாளங்கள் முழங்க பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும், நாள் தவறாமல் பூஜைகள் நடைபெறுவது சிறப்புக்குரிய விஷயமாகும்.

இந்தக் கோவிலில் வித்தியாசமான வழிபாட்டு முறை ஒன்றை வழக்கத்தில் இருக்கிறது. அது சிவலிங்க பிரதிஷ்டை வழிபாடு ஆகும். தங்கள் வேண்டுதல் நிறைவேற நினைக்கும் பக்தர்கள், தங்களால் முடிந்த அளவில் வெவ்வேறு அளவுகளில் சிவலிங்கத்தை செய்து கொண்டு வந்து, இந்தக் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கங்கள், அந்தந்த பக்தர்களின் பெயரிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறு கிறது. 108 அடி உயர சிவலிங்கத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

கோலார் தங்கச்சுரங்கத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் கோடிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. பெங்களூருவில் இருந்து கோலார்பங்கார்பெட்டை வழியாக இந்தக் கோவிலை அடையலாம்.
Tags:    

Similar News