ஆன்மிகம்
பாதாளேசுவரர் கோவில்- திருஅரதைப் பெரும்பாழி

பாதாளேசுவரர் கோவில்- திருஅரதைப் பெரும்பாழி

Published On 2021-05-18 08:06 GMT   |   Update On 2021-05-18 08:06 GMT
சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும்.
சிவஸ்தலம் பெயர் -    திருஅரதைப் பெரும்பாழி (தற்போது அரித்துவார மங்கலம் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்  - பாதாளேசுவரர்
இறைவி பெயர்  - அலங்கார நாயகி

தல வரலாறு: பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் சிவனது பாதத்தையும், திருமுடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவர்களே பெரியவர் என்ற நிபந்தனையில் போட்டி ஆரம்பமாகிறது. பிரம்மா அன்னப்பறவையில் ஏறி திருமுடியை தரிசிக்க கிளம்புகிறார். ஆனால் திருமுடி தரிசனம் கிடைக்கவில்லை. அப்போது சிவனின் தலையிலிருந்து தாழம்பூ கீழே வந்து கொண்டிருந்தது. தாழம்பூவை பார்த்த பிரம்மா, தான் சிவனின் திருமுடியை தரிசித்ததாக பொய் கூறும்படி சொன்னார்.

தாழம்பூவும் ஒத்துக்கொண்டது. இதையறிந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்றும், பிரம்மனுக்கு பூமியில் கோயில் இருக்க கூடாது என்றும் சபித்தார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் திருவடியை பார்க்க முயன்றார். முடியவில்லை போக விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். விஷ்ணு இத்தலத்தில் தான் பூமியை துவாரம் போட்டு சிவனின் திருவடி தரிசனம் தேடினார் என்று தலபுராணம் கூறுகிறது.. எனவே தான் இத்தலம் அரித்துவாரமங்கலம் ஆனது. சிவனின் திருவடி தரிசனம் காண விஷ்ணு பூமியை தோண்டிய பள்ளம் இன்றும் மூலஸ்தானத்தில் உள்ளது. இதை கல்வைத்து மூடியுள்ளார்கள். கோவில் சிவாச்சாரியாரிடம் கேட்டால் அவர் காணபிப்பார்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இவ்வைந்துமே காவிரியின் கிழக்குக் கரையிலே அமைந்து இருப்பதுடன் ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின் போது வந்து வணங்கி முடித்துக் கொள்ளும் படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால் சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞான சம்பந்தர் தம் தல யாத்திரையின் போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் விளங்குகிறது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், பதஞ்சலி வியாக்ரபாதருடன் நடராஜர், காசி விஸ்வநாதர், சனிபகவான், சூரியன், சந்திரன், பைரவர், சம்பந்தர், சுந்தரர், லிங்கோத்பவர், சப்தமாதர்கள் உள்ளனர். மூலவர் சுயம்பு லிங்க மூர்த்தி வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் பன்றியின் (வராகத்தின்) கொம்புகளுள் ஒன்றை முறித்து தன் மார்பில் அணிந்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. சிவனுக்கு வலது பக்கம் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவ்வாறு இருக்கும் அமைப்பை கல்யாண கோலம் என்பார்கள். அம்மன் துர்க்கை அம்சமாக இருப்பதால் துர்க்கைக்கு இத்தலத்தில் தனி சன்னதி கிடையாது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதிக்கு நேரே தனிக் கோபுர வாயில் உள்ளது.

சிவனே நவகிரகங்களுக்கு அதிபதியாக இருப்பதால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. இவரை தரிசித்தாலே அனைத்து தோஷங்களும் விலகும். அரித்துவாரமங்கலத்தில் உள்ள இறைவனை தரிசித்தால் "ஹரித்துவார்" தரிசித்த பலன் கிடைக்கும் என்பர். பாதாள ஈஸ்வரரை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும்.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலை வழியில் வெட்டாறு பாலம் தாண்டியவுடன் வலதுபுறம் திரும்பிச் செல்லும் பாதையில் சென்று அரித்துவார மங்கலம் தலத்தை அடையலாம். தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன. கும்பகோணத்திலிருந்து சுமார் 22 கி.மி. தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அரித்துவார மங்கலம் செல்லலாம். திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஆலய முகவரி    

அருள்மிகு பாதாளேசுவரர் திருக்கோயில்
அரித்துவார மங்கலம்
அரித்துவார மங்கலம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612802
Tags:    

Similar News