ஆன்மிகம்
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்

Published On 2020-06-20 02:19 GMT   |   Update On 2020-06-20 02:19 GMT
விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார். இது 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.
மூலவர்:  மணக்குள விநாயகர்
தீர்த்தம்: மூலவருக்கு மிக அருகில் தீர்த்தம் உள்ளது.
பழமை:  500 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:  மணக்குளத்து விநாயகர்
ஊர்: புதுச்சேரி

தலவரலாறு

பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேல் பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். புதுச் சேரியைப் பற்றி அறியக் கிடக்கின்ற பல தரப்பட்ட வரலாற்றுச் செய்திகள் இந்த உண்மையை வலியுறுத்துகின்றன. இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் வந்தது.

இந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த மணலால் ஆன குளத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாகவும், அந்த சுவையான நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. அதனால்தான் இவருக்கு ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இவருக்கு ‘வெள்ளைக்கார பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு.

தலப்பெருமை

அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.

சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். தொல்லைக் காசு சித்தர் இந்த மணக்குளத்து விநாயகரை வணங்கியுள்ளார். பாரதி, அரவிந்தர் அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தினந்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. மூன்று வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.

சிறப்பு

விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ மூர்த்தி கொண்டு செல்லப்படுகிறது.

கிணற்றின் மீதுதான் மூலவர் :

தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது. இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்

திருவிழா


விநாயகர் சதுர்த்தி – இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள்.

பிரம்மோத்சவம் – ஆவணி – 25 நாட்கள் திருவிழா பவித்திர உற்சவம் – 10 நாட்கள் திருவிழா

இது தவிர மாதந்தோறும் சங்கடகர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிடேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்

கோரிக்கைகள்:


எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் இசுலாம், கிறித்தவ மதத்தை சார்ந்தவர்களும் வெளிநாட்டினரும் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள். பாண்டிச் சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தாங்கள் போக வேண்டிய ஊருக்கு போகிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. அத்தனை விசேஷம் படைத்தவர் இந்த மணக்குளத்துவிநாயகர்.

நேர்த்திக்கடன்

உண்டியல் காணிக்கை, வெளிநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது. அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு உதாரணம். இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள் வெள்ளித்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.
Tags:    

Similar News